இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 62 பேர் உயிரிழப்பு

இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 62 பேர் உயிரிழப்பு

1 mins read
77a480b3-3cac-43a6-8c7c-630f5b6a680f
மேற்கு ஜாவாவை திங்கள்கிழமை நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து சேதமுற்ற கட்டடம் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவை திங்கள்கிழமை நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து குறைந்தது 62 பேர் உயிரிழந்தனர், 700க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

ரிக்டர் அளவில் 5.6 என நிலநடுக்கம் பதிவானது. பல கட்டடங்கள் சேதமுற்றதுடன் தலைநகர் ஜகார்த்தா வரை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு ஜாவாவின் சியாஞ்சுர் எனும் பகுதியில் இந்தோனீசிய நேரப்படி பிற்பகல் 1.21 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2.21 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது. பத்து முதல் 15 வினாடிகள் வரை வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளைவிட்டு வெளியேறினர்.

"நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது," என்று இந்தோனீசியாவின் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஊடகங்களிடம் முன்னதாகக் கூறியது.

சமூக ஊடகங்களில் வலம் வந்த காணொளிகள், மக்கள் பீதியடைந்து அலறுவதைக் காட்டின. சிலருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் வழிந்தது. பல வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்தன.

மேற்கு ஜாவாவில் சுக்காபுமி, போகோர், பண்டூங் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. கட்டடங்கள் குலுங்குவதையும் சன்னல்கள் அதிர்வதையும் அறைகலன்கள் நகர்வதையும் தாங்கள் உணர்ந்ததாக ஜகார்த்தாவில் சில குடியிருப்பாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

"ஜகார்த்தா போன்ற பல பகுதிகளில் லேசானது முதல் வலுவான அளவு வரை நில அதிர்வுகளைக் குடியிருப்பாளர்கள் உணர்ந்தனர்," என்று பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியது.