கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் தங்கள் கூட்டணிக்கே உள்ளது என்று பக்கத்தான் ஹரப்பானும் பெரிக்கத்தானும் நேற்று மாறி மாறிக் கூறிய நிலையில் அரசியல் இழுபறிக்கு முடிவு எதுவும் நேற்று காணப்படவில்லை.
கூட்டணிக்கட்சிகளின் ஆதரவை நிரூபிப்பதற்கான காலக்கெடுவை மலேசிய மாமன்னர் இன்று பிற்பகல் 2 மணி வரை நீட்டித்துள்ளார்.
மலேசியாவின் 10வது பிரதமராக திரு முகைதீன் யாசினை தேர்வு செய்ய 112 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களாக பிரமாண பத்திரங்களை மாமன்னருக்கு தான் அனுப்பி வைத்துள்ளதாக பெரிக்கத்தான் நேஷனல் முன்னதாகக் கூறியது.
நேற்று பிற்பகல் 2 மணி காலக்கெடுவிற்கு முன்னதாகவே ஆதரவுக் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக பெரிக்கத்தான் குறிப்பிட்டது.
இருப்பினும் தேசிய முன்னணியின் கோரிக்கையை ஏற்று ஆதரவளிக்கும் கட்சி விவரங்களை தெரிவிக்க நேற்று பிற்பகல் 2 மணிவரை விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மாமன்னர் 24 மணிநேரத்துக்கு நீட்டித்தார்.
பலரும் எதிர்பார்க்காத திருப்பமாக பக்கத்தான் ஹரப்பானுக்கும் பாரிசான் நேஷனல் எனப்படும் தேசிய முன்னணிக்கும் இடையே கூட்டணிப் பேச்சு வார்த்தை நேற்று முற்பகலில் கோலாலம்பூரில் உள்ள செரி பசிஃபிக் ஹோட்டலில் இடம்பெற்றது. டாக்டர் அன்வாருக்கும் தேசிய முன்னணி தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடிக்கும் இடையிலான அச்சந்திப்பில் பஹாங், பேராக் மாநிலச் சட்டமன்றங்களில் கூட்டணி அமைப்பதன் தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.
ஆனால் பிரதமர் பதவிக்கு யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி தமது கூட்டணியின் உச்சமன்றம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் திரு ஸாஹிட். அந்த உச்சமன்றம் இன்று முடிவைத் தெரிவிக்கும் என்று கூறப்பட்டது.
பெரிக்கத்தான் நேஷனலுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் தேசிய முன்னணி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் திரு ஸாஹிட் கூறினார்.
ஆனால் செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய டாக்டர் அன்வார், ஆட்சியமைக்கத் தேவையான 112க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தம் பக்கம் உள்ளனர் என்று வலியுறுத்தினார்.
பக்கத்தான் ஹரப்பான் - தேசிய முன்னணி கூட்டணி மலர்ந்தால் தாம்தான் பிரதமர் வேட்பாளர் என்றார் அவர்.
இருப்பினும் தேசிய முன்னணியைச் சேர்ந்த குறைந்தது 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு முகைதீன் பிரதமர் வேட்பாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக பெரிக்கத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சனூசி நூர் கூறினார். ஜோகூர் உள்ளிட்ட பல்வேறு மாநில அம்னோ பிரிவுகளும் அத்தகைய கூட்டணிக்கு எதிராக உள்ளன.
கடந்த சனிக்கிழமை 19ஆம் தேதி நடைபெற்ற 15வது மலேசியப் பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு 82 இடங்களும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு 73 இடங்களும் கிடைத்தன. பாரிசான் நேஷனல் கூட்டணி 30 இடங்கள் பெற்று சரிவைச் சந்தித்தது. 28 இடங்கள் பெற்ற போர்னியோ கட்சிகளான ஜிபிஎஸ், ஜிஆர்எஸ் இரண்டும் திரு முகைதீனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
- மேலும் மலேசிய செய்திகள் 6ஆம் பக்கத்தில்.

