சிங்கப்பூரின் தாதியர் அணியை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 4,000 புதிய தாதிகள் வேலையில் சேர்க்கப் படுவர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
இது சிங்கப்பூரில் தற்போதுள்ள தாதிகள் எண்ணிக்கையில் 10 விழுக்காடாகும் என்றும் 2021ல் சுமார் 3,300 புதிய தாதிகள் வேலையில் சேர்க்கப்பட்டனர் என்றும் திரு ஓங் கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது வெளிநாட்டுத் தாதிகளை வேலையில் சேர்ப்பது குறைந்ததால், அதற்கு ஈடுகட்டும் வகையில் அடுத்தாண்டு சேர்க்கப்படும் புதிய தாதியரில் 60 விழுக்காட்டினர் வெளிநாட்டவராக இருப்பர்.
"நமது தாதியர் அணியைப் பெருக்க கூடுதலான வெளிநாட்டவரை வேலையில் சேர்த்தாலும், தாதியர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து உள்ளூர்க்காரர்களாக இருப்பார்கள். தாதிமைப் படிப்பின் வழியாகவும் பணி இடைக்காலப் பயிற்சித் திட்டங்களின் வழியாகவும் அவர்கள் தாதிமைத் தொழிலில் சேர்க்கப்படுவார்கள்," என்று திரு ஓங் தெரிவித்தார்.
ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிப்பதன்வழி தாதிகளின் பணிச்சுமையைக் குறைக்கலாம் என்றார் திரு ஓங். பெருந்தொற்றின்போது தாதியருக்கு நிலவிய போட்டியால் பல தாதிகள் மற்ற நாடுகளுக்குச் சென்றுவிட்டதை அவர் சுட்டினார். வேலையிலிருந்து விலகிய அரசாங்க மருத்துவ மனைத் தாதிகளின் விகிதம் 2021ஆம் ஆண்டு அதற்கு முந்திய ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சத்தை அடைந்ததாக மூத்த சுகாதார நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தார்.
தாதியரை வேலையில் தக்கவைத்துக்கொள்ள, அரசாங்கத் துறைத் தாதியருக்கு அடிப்படைச் சம்பளத்தில் 1.7 முதல் 2.1 மாதங்கள் வரையிலான சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஜூலையில் அறிவித்திருந்தார்.
மேலும், மருத்துவமனைகளில் ஊழியர் பற்றாக்குறை நிலவியபோதும், மருத்துவமனைப் படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கவனிப்பு, அங்கு படுக்கைகளுக்காகக் காத்திருக்கும் நேரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டடுள்ளதாக திரு ஓங் கூறினார். எக்ஸ்பிபி வகை கிருமிப் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து நிலைமை மேம்பட்டது.
அவசர சிகிச்சைப் பிரிவில் உடனடிக் கவனிப்பு தேவைப்பட்ட நோயாளிகள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட் டனர். உடனடிக் கவனிப்பு தேவைப் படாதோர் காத்திருந்த நேரம் பாதியாகக் குறைந்தது.
அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருக்கும் நேரம் இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஏழு மணி நேரத்தி லிருந்து நான்கு மணி நேரமாகக் குறைந்தது.
மேலும், கொவிட்-19 நோயாளிகளுக்காக மருத்துவமனைப் படுக்கைகளை ஒதுக்காமல் இருப்பது, மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி நீண்டகால சிகிச்சைக்கு மாறுவோருக்கு வேறு இடைக்கால வசதிகளை ஏற்படுத்துவது போன்றவற்றின் வழி மருத்துவமனைப் படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்றார் திரு ஓங்.

