பக்கத்தான் ஹரப்பானையோ பெரிக்கத்தான் நேஷனலையோ ஆதரிக்காமல் எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருந்துவிட தேசிய முன்னணிக் கூட்டணி செவ்வாய்க்கிழமை முடிவெடுத்துள்ளது.
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராகிம் அல்லது பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின் வழிநடத்தும் சிறுபான்மை அரசாங்கத்தை நியமிப்பதா என்பது குறித்து இனி மாமன்னர் முடிவெடுப்பார்.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நிரூபிப்பதற்கான காலக்கெடு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியுடன் முடிவடைந்தது.
அரண்மனைக்கு வெளியே திரண்டிருந்த செய்தியாளர்களை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு சந்தித்துப் பேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, வாக்காளர்களின் முடிவை மதிக்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.
"பொறுமையுடன் இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் என்னுடைய முடிவை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நாம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். நாம் இங்கிருந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். என்னை முடிவெடுக்க விடுங்கள்," என்று செய்தியாளர்களிடம் மாமன்னர் கூறினார்.

