பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராகிமையும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசினையும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அரண்மனையில் சந்திக்க மலேசிய மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பானையோ பெரிக்கத்தான் நேஷனலையோ ஆதரிக்காமல் எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருந்துவிட தேசிய முன்னணிக் கூட்டணி முடிவெடுத்துவிட்டதால், எந்தவொரு தலைவருக்கும் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இல்லை. இதனால், மலேசியாவின் 10வது பிரதமரை நியமிக்கும் பொறுப்பு இப்போது மாமன்னரிடம் உள்ளது.
"தனிப்பெரும்பான்மையில் எந்தவொரு எம்.பி.க்கும் நம்பிக்கை இல்லாததால், பக்கத்தான் ஹரப்பான், பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர்களை மாலை 4.30 மணிக்கு சந்திக்க மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்," என்று அரண்மனை வெளியிட்ட அறிக்கை கூறியது.
முன்னதாக, அரண்மனைக்கு வெளியே திரண்டிருந்த செய்தியாளர்களை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு சந்தித்துப் பேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, வாக்காளர்களின் முடிவை மதிக்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்தார்.

