தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்பாராத உலகக் கிண்ண ஆட்ட முடிவு: மீண்டெழுந்தது சவூதி, மண்ணைக் கவ்வியது அர்ஜெண்டினா

1 mins read
ef26a998-a081-4789-808e-030c43f0bfa9
ஆட்ட முடிவில் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் மிகப்பெரிய ஆச்சரியம் தரும் ஆட்டங்களில் ஒன்றில், கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினாவை சவூதி அரேபியா 2-1 எனும் கோல் கணக்கில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இன்றைய தலைமுறையின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான லயனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவுக்கு எதிராக சவூதி சோபிக்கும் என பெரும்பாலானோர் நினைத்திருக்க மாட்டர்.

ஆட்டத்தின் முற்பாதியில் அர்ஜெண்டினா பக்கம் காற்று வீசியது. இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது. ஆனால், ஆட்டத்தின் பிற்பாதியில் ஐந்து நிமிட இடைவேளையில் இரு கோல்களைப் போட்டு மீண்டெழுந்தது சவூதி.

தனது முன்னிலையைத் தக்கவைத்துக்கொள்ள கடைசிவரை உயிரைக் கொடுத்து போராடியது சவூதி.

அவமானத்தைத் தவிர்க்க அர்ஜெண்டின வீரர்கள் படையாகத் திரண்டு தாக்குதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். ஆனால், அவர்களது தாக்குதல்களை சவூதி வீரர்கள் மீள்திறனுடன் சமாளித்து வெற்றிக் கனியைச் சுவைத்தனர்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி மத்தியக் கிழக்கில் நடைபெறுவது இதுவே முதன்முறை. அண்டை நாடான கத்தாரில் போட்டி நடைபெறுவது சவூதிக்கு ஏதோ ஒரு விதத்தில் சாதகமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. அதுவும், விளையாட்டரங்கில் ஆட்டத்தை நேரடியாகக் கண்ட 88,012 பேரில் ஏராளமானோர் சவூதி தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் பச்சை சட்டைகளை அணிந்திருந்தனர்.