மலேசியாவின் எதிரெதிர்க் கூட்டணிகளான பக்கத்தான் ஹரப்பானும் பெரிக்காத்தான் நேஷனலும் ஒன்றிணைந்து ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று மலேசிய மாமன்னர் அப்துல்லா அகமது ஷா நேற்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் மாமன்னரின் இந்தக் கோரிக்கையை பெரிக்காத்தான் நெஷனலின் தலைவர் முகைதீன் யாசின் ஏற்க மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் நடந்து முடிந்த 15வது மலேசியப் பொதுத்
தேர்தலில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்
காமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கு 81 தொகுதிகளைக் கைப்பற்றிய பக்கத்தான் ஹரப்பானின் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் 73 தொகுதிகளைக் கைப்பற்றிய பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசினுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க அன்வாருக்கும் முகைதீனுக்கும் வழங்கப்பட்ட காலக்கெடு நேற்று பிற்பகல் 2 மணிக்கு முடிந்தது.
ஆட்சி அமைக்க ஹரப்பானுக்கும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் ஆதரவு தரப்போவதில்லை என்று கடைசி நேரத்தில் தேசிய முன்னணி பின்வாங்கியது. இந்நிலையில், முகைதீனையும் அன்வாரையும்
மாமன்னர் நேற்று மாலை அரண்
மனைக்கு அழைத்தார்.
"பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்த்து 115 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. இதை நிரூபிக்கும் ஆவணங்களை நாங்கள் மாமன்னரிடம் ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்டோம் என்பதை
தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பு கிறேன்.
"இதுதொடர்பாக ஏற்கெனவே கலந்துரையாடிவிட்டோம். பக்கத்தான் ஹரப்பானுடன் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படமாட்டோம். ஆரம்பத்திலிருந்து இதுதான் பெரிக்காத்தானின் நிலைப்பாடு. ஐக்கிய அரசாங்கத்துக்கு இணக்கம் தெரிவித்து ஆவணம் ஒன்றில் கையெழுத்திடுமாறு என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதில் நான் கையெழுத்திட்டேன். ஆனால் அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கிறேன் என்று ஆவணத்தில் குறிப்பிட்டேன்," என்றார் முகைதீன்.
இதற்கு நேர்மாறாக, மாமன்னரின் ஐக்கிய அரசாங்க அழைப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக
அன்வார் கூறியுள்ளார்.
மாமன்னருடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேர கலந்துரையாடலுக்குப் பிறகு, அரண்மனையி
லிருந்து முதலில் முகைதீன் வெளியேறினார். செய்தியாளர்களிடம் பேசாமல் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அவரை அடுத்து, வெளியே வந்த அன்வார் செய்தியாளர்
களிடம் பேசினார். பிரதமர்
பதவியில் யாரை நியமிப்பது என்பது குறித்து மாமன்னர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
"பிரதமர் பதவி குறித்து கலந்துரையாட மாமன்னர் எனக்கு அழைப்பு விடுத்தார். இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு அவரிடம் எனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார் அன்வார்.
வலுவான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று மாமன்னர் தமது விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டதாக அன்வார் கூறினார்.
இனம், சமயம், வட்டாரம் ஆகியவை அடிப்படையில் அனை
வரையும் உள்ளடக்கிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக்கொண்டதாக அன்வார் தெரிவித்தார். மாமன்னர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாக அன்வார் கூறினார். மாமன்னரின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, இன்று காலை அரண்மனைக்கு வந்து தம்மைப் பார்க்கும்படி தேசிய முன்னணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் மாமன்னர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை கண்டறிய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல்
நிபுணர்கள் கூறுகின்றனர்.

