செயலிகளின் அடிப்படையில் குறுகிய நேரத்துக்கு வேலை பார்க்கும் தற்காலிக விநியோக ஊழியர்கள், டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆகியோர் வேலை பார்க்கும்போது காயமடையும் பட்சத்தில் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறவிருக்கிறார்கள்.
மத்திய சேம நிதிச் சந்தா தொகையும் அவர்கள் கணக்கில் சேரவிருக்கிறது. சிங்கப்பூரில் இத்தகைய ஊழியர்கள் ஏறக்குறைய 73,000 பேர் இருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவும் பெரிய அளவிலான கொள்கைகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன.
அதன்படி, அத்தகைய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், தரப்படுத்தப்பட்ட காப்புறுதிப் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டி இருக்கும்.
வேலை பார்க்கும்போது ஊழியர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு இந்த ஏற்பாடு பலனளிக்கும்.
மசே நிதிச் சந்தாவைப் பொறுத்தவரை, 30 வயதை எட்டாதவர்களுக்கு மட்டுமே அது கட்டாயமாக்கப்படும்.
மற்றவர்களைப் பொறுத்தவரை விரும்பினால் சேர்ந்துகொள்ளலாம்.
இவற்றுக்கு வகைசெய்யும் புதிய கொள்கைகள் முடிந்த வரை விரைவாக 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
விநியோக ஊழியர்கள் ஆலோசனைக் குழு ஒன்றின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
அதையடுத்து இவை நடைமுறைப்படுத்தவுள்ளன. அந்தக் குழு 60 பக்க அறிக்கையை அரசாங்கத்திடம் தாக்கல் செய்துள்ளது.

