கோலாலம்பூர்: மலேசியாவின் 10வது பிரதமராக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் திரு அன்வார் இப்ராகிம் பதவியேற்றுள்ளார்.
அரசியலில் அதிவேகமான உயர்வு, எட்டிப் பிடிக்கும் தூரத்தில் பிரதமர் பதவி, அதன் பிறகு கடும் வீழ்ச்சி, இரு முறை சிறைவாசம், ஊழல் வழக்குகள், சர்ச்சைகள், எதிர்த்தரப்பு அரசியல் என பலவற்றையும் கடந்து, 24 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் பிரதமர் கனவை அவர் அடைந்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள அரச மாளிகையில் நேற்று, கறுப்பு பாரம்பரிய மலாய் ஆடையை அணிந்திருந்த திரு அன்வார் பதவியேற்றுக் கொண்டார்.
மலேசியத் தேர்தல் முடிந்து ஆறு நாளாகியும் அரசாங்கம் அமையாததை அடுத்து மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா நேற்று காலை ஒன்பது மலாய் அரசர்களுடன் சந்திப்பு நடத்தினார். அக்கூட்டத்துக்குப் பின்னர் திரு அன்வாரை மாமன்னர் புதிய பிரதமராக நியமித்ததாக அறிவிக்கப்பட்டது.
மாமன்னரின் முடிவுக்கு பெரும் பாலான அரசியல் கட்சிகள் இசைந்தன. ஆனால், இரண்டாவது அதிக இடங்களைப் பெற்ற பெரிக்கதான் நேஷனல் கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் அந்த முடிவை எதிர்த்துள்ளார்.
இருப்பினும் தமது ஐக்கிய அரசாங்கத்தில் சேர பெரிக்கத்தானுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக பிரதமர் அன்வார் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பெரும்பான்மை மலாய் இனத்த வரின் உரிமைகளையும் மலேசியாவின் அதிகாரத்துவ இஸ்லாமிய சமயத்தையும் பாதுகாக்கும் அதே நேரத்தில் எல்லா இனத்தவரின் உரிமைகளையும் மலேசியாவின் எல்லா நிலப் பரப்புகளையும் தாம் பாதுகாக்கப் போவதாக அவர் கூறினார்.
வரும் நவம்பர் 28ஆம் தேதியை அவர் பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளார்.
நேற்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் அரசாங்கத் தலைமைச் செயலாளர், தலைமை நீதிபதி, தலைமை வழக்கறிஞர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நாயகர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரி களுடன் பக்கத்தான் ஹரப்பான், பாரிசான் நேஷனல் எனப்படும் தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். திரு அன்வாரின் மனைவியும் முன்னாள் துணைப் பிரதமருமான திருவாட்டி வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் அவர்களின் ஆறு பிள்ளைகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
"இந்த நம்பிக்கையை நான் பணிவுடனும் பொறுப்புடனும் ஏற்கிறேன். என் அணியுடன் சேர்ந்து, மக்கள் விருப்பத்தின் வழிகாட்டுதலின்படி பெருமிதம் நிறைந்த இப்பொறுப்பை நான் நிறைவேற்றுவேன் என்று திரு அன்வார் பதவியேற்ற பின்னர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார்.
இளம் தலைவராக அம்னோவில் சேர்ந்து வேகமாக பதவி உயர்வுபெற்று 1993ஆம் ஆண்டில் துணைப் பிரதமர் ஆனார் திரு அன்வார். ஆனால் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்தன. 1998ல் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கடுத்த ஆண்டு குற்றச்சாட்டு களின் பேரில் முதன்முறையாக அவர் சிறைசென்றார்.
அந்நேரத்தில் திரு அன்வார் தமது கெஅடிலான் கட்சியை தொடங்கினார். மீண்டும் 2015ல் ஓர் பாலின உறவுகொண்ட குற்றச்சாட்டுக்காக அவர் சிறைத் தண்டனை பெற்றார். ஆனால் 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டது.
அம்னோ கட்சியிலிருந்து விலகி திரு அன்வாருடன் கூட்டணி அமைத்திருந்த டாக்டர் மகாதீர் மீண்டும் பிரதமர் ஆனார். ஆனால் ஈராண்டுகள் கழித்து பிரதமர் பதவியை திரு அன்வாரிடம் ஒப்படைப்பதாகக் கூறியிருந்த டாக்டர் மகாதீர், சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. மேலும், கெஅடிலான் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் சிலர் கட்சி தாவி, அம்னோ தலைமையில் மீண்டும் அரசாங்கம் அமைக்கப்பட்டதை அடுத்து, பிரதமராகும் வாய்ப்பு திரு அன்வாரின் கைவிட்டுப் போனது.
நேற்று பதவி ஏற்றுக்கொண்ட திரு அன்வாருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தலில் பலத்தை நிரூபித்த காட்டிய பக்கத்தான் ஹரப்பானுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
வட்டார, உலகளாவிய சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் திரு அன்வார் பிரதமர் பதவியை ஏற்றுள்ளதைச் சுட்டிய திரு லீ, இச்சவால்களைச் சமாளிக்க சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள் - 8ஆம் பக்கம்

