பெய்ஜிங்: சீனாவில் கொவிட்-19 பரவல் தொடங்கியதிலிருந்து அதன் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்நாடு இதுவரை கொவிட்-19 பரவலுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கைகளைச் சற்று தளர்த்திய நிலையில் பரவல் அதிகரித்துள்ளது.
சீனாவில் புதன்கிழமை 31,444 புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பதிவான அப்போதைய உச்ச எண்ணிக்கையான 28,793 புதிய தொற்றுகளைவிட இது அதிகம்.
பெய்ஜிங், சொங்சிங், குவாங்சோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
நகரங்களில் கிருமிப் பரிசோதனை நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளன. கிருமி தொற்றியவர்களைத் தனிமைப்படுத்த தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏப்ரலில் ஷாங்காய் நகரம் முழுவதும் சுமார் இரு மாதங் களுக்கு முடக்கப்பட்டபோது, மக்கள் உணவு, தண்ணீருக்குக் கூட அல்லாடினர். அதனால் இனி நகரங்களை முழுமையாக முடக்குவதைத் தவிர்க்கப்போவதாக அரசாங்கம் கூறி வந்துள்ளது.
ஆனால் பல நகரங்களில் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. அதனால் இயல்பு வாழ்க்கையும் பொருளியல் நடவடிக்கைகளும் தடைபட்டுள்ளன.
பெய்ஜிங்கில் தொற்று பெருகியதை அடுத்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல கட்டடங்கள் மூடப்பட்டுள்ளன.
தொற்று மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கும் மருத்துவப் பணியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தலைநகரின் சில பகுதிகள் முடக்கப்படலாம் என்ற பயத்தில் மக்கள் அவசர அவசரமாக அத்தியாவசிய, மளிகைப் பொருள்களை வாங்கிக் குவித்து வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் கைபேசிகளின் உற்பத்திக்கு பெயர்போன ஸெங்சாவ் நகரத்தின் பல வட்டாரங்களில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று அபாயம் அதிகம் உள்ள வீடுகளில் அல்லது வளாகங்களில் இருப்பவர்களைத் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அந்நகரில் ஆப்பிள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஃபோக்ஸ்ன்கான் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் கலவரத்தில் ஈடுபட்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டையிட்டதை அடுத்து, நடமாட்டக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒரு மாத முடக்கத்தால் ஏற்பட்ட கோபம், ஃபாக்ஸ்கான் பொய் சொல்லி உரிய சம்பளத்தையும் போனசையும் தரவில்லை என்ற சந்தேகம் ஆகியவற்றால் ஊழியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறால் புதிய ஊழியர்களை வேலையில் சேர்க்கும்போது சம்பள விவரங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டதாகக் கூறிய ஃபோக்ஸ்கான் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

