இளநிலைப் பிரிவு அதிகாரிகள் கூடுதலாக ஒருமுறை மட்டும் வழங்கப்படும் $700 சிறப்புத் தொகையைப் பெறுவர்
அரசாங்க ஊழியர்கள் அனைவரும் 1.1 மாத ஆண்டிறுதி போனஸ் தொகையைப் பெறுவார்கள் என்று பிரதமர் அலுவலகத்தின்கீழ் உள்ள பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இளநிலைச் சம்பளப் பிரிவுகளில் உள்ள அரசாங்க ஊழியர்கள் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கூடுதல் சிறப்புத் தொகையைப் பெறவுள்ளனர்.
அதாவது எம்எக்ஸ்15 சம்பளப் பிரிவுக்கு நிகரான அல்லது அதற்கும் கீழுள்ள சம்பளப் படிநிலைகளில் உள்ளவர்கள் கூடுதல் சிறப்புத் தொகையாக $700ஐப் பெறுவர்.
அத்துடன், அரசாங்கம் வழக்கம்போல 13வது மாதச் சம்பளம் எனப்படும் ஆண்டு நிரப்புத் தொகையை எல்லா அரசாங்க ஊழியர்களுக்கும் வழங்கும்.
வருடாந்திர மாறுவிகித சம்பளத்தொகை எனப்படும் போனஸ் தொகை, பொருளியல் முன்னுரைப்பைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில் பொதுத் துறை அதிகாரிகளின் கடும் உழைப்பை அங்கீகரிப்பதாக பொதுச் சேவைப் பிரிவு நேற்று தெரிவித்தது.
அரசாங்க ஊழியர்களுக்குக் கடந்த ஆண்டிறுதியில் வழங்கப்பட்ட ஒரு மாத போனஸ் தொகையைவிட இவ்வாண்டு போனஸ் சற்று கூடுதலாக உள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சு அதன் முன்னுரைப்பைத் திருத்தி, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு 3.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று கூறியுள்ளதைப் பொதுச் சேவைப் பிரிவு சுட்டியது.
கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சிங்கப்பூர் பொருளியல், 4.1 விழுக்காடு வளர்ச்சியாக மெதுவடைந்துள்ளதைப் பொதுச் சேவைப் பிரிவு சுட்டியது.
ஒப்புநோக்க இரண்டாவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான பொருளியல் வளர்ச்சி 4.5 விழுக்காடாக இருந்தது.
2022ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நிலையாக நீடித்திருந்தாலும், வெளிப்புறம் சார்ந்த துறைகளில் பொருளியல் வளரச்சிக்கான எதிர்பார்ப்பு குறைந்துள்ளதாகப் பொதுச் சேவைப் பிரிவு கூறியது.
உலகப் பொருளியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருவதும் உலகப் பொருளியல் 2015ல் அதற்குக் காரணம் என்று அமைப்பு விவரித்தது.
வேலையில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருகிறது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் வேலையில்லாதவர்களின் விகிதம் சற்று அதிகரித்திருந்தது. அத்துடன் மூன்றாம் காலாண்டில் வேலை இழப்புகள் அதிகரித்தன என்று பொதுச் சேவைப் பிரிவு கூறியது.
இவ்வாண்டு அரசாங்க ஊழியர்களுக்கு 0.35 மாத ஆண்டு நடுப்பகுதி போனஸ் தொகையாக வழங்கப்பட்டது.
அதைச் சேர்த்தால் அரசாங்க ஊழியர்களுக்கு இவ்வாண்டு முழுவதற்கும் மொத்தம் 1.45 மாத மாறுவிகித சம்பளத்தொகையைப் பெறுவர்.
இளநிலைச் சம்பளப் பிரிவுகளில் உள்ள அரசாங்க இவ்வாண்டு மொத்தத்துக்கும் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கூடுதல் சிறப்புத் தொகையாக அதிகாரிகள் $1,100 வரையிலான தொகையைப் பெற்றிருப்பர்.
மாறுவிகித சம்பளத்தொகை எனப்படும் போனஸ் தொகை, பொருளியல் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. ஓர் அரசாங்க ஊழியரின் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போனஸ் நிர்ணயிக்கப்படுகிறது.
சவால்களைக் கடப்பாட்டுடனும் உறுதியுடனும் எதிர்கொண்டுள்ள எல்லா அரசாங்க ஊழியர்களின் உழைப்பையும் தியாகத்தையும் அரசாங்கம் பாராட்டுவதாகப் பொதுச் சேவைப் பிரிவு அதன் அறிக்கையில் தெரிவித்தது.

