மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுடன் பிரதமர் லீ சியன் லூங் இன்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் பேசினார். விரைவில் சிங்கப்பூருக்கு வருமாறு திரு அன்வாருக்கு பிரதமர் லீ அழைப்பு விடுத்தார்.
"எங்களது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த, அவருடனும் (திரு அன்வார்) புதிய அரசாங்கத்துடனும் சேர்ந்து பணியாற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன்," என்று தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
திரு அன்வாரை பல்லாண்டு காலமாக தமக்குத் தெரியும் என்று கூறிய பிரதமர் லீ, கடைசியாக 2018ல் தாம் அவரைச் சந்தித்ததாகச் சொன்னார். அப்போது சிங்கப்பூருக்கு வந்திருந்த திரு அன்வார், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மாநாடு ஒன்றில் உரையாற்றி இருந்தார்.
"சிங்கப்பூரும் மலேசியாவும் நெருங்கிய பங்காளித்துவ நாடுகளாகும். இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்பு உள்ளது. நமது இருதரப்பு உறவை மேம்படுத்த இன்னும் பலவற்றை நம்மால் செய்ய முடியும்," என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
சமூக ஊடகத்தில் பிரதமர் லீக்குப் பதிலளித்த திரு அன்வார், தொலைபேசி அழைப்புக்காகவும் வாழ்த்து தெரிவித்ததற்காகவும் நன்றி கூறினார்.
இதுகுறித்து திரு அன்வார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "நெருங்கிய அண்டை நாடுகளாகவும் ஆசியானில் பங்காளித்துவ நாடுகளாகவும் மலேசியாவும் சிங்கப்பூரும் பல பொதுவான அம்சங்களையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.
"அடுத்துவரும் சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்கவும் மலேசியா-சிங்கப்பூர் உறவுகளை மேலும் முன்னெடுத்துச்செல்வதில் சேர்ந்து பணியாற்றவும் நான் ஆவலுடன் உள்ளேன்," என்றார்.

