பிரதமர் லீ சியன் லூங், மலேசியா வின் புதிய பிரதமராகப் பொறுப்பு ஏற்றுள்ள அன்வார் இப்ராகிமுடன் தொடர்புகொண்டு சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப் படுத்த அன்வாருடனும் புதிய அரசாங்கத்துடனும் சேர்ந்து செயல்படப் போவதாகவும் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.
"மலேசியாவின் 10வது பிரதமராக பதவி ஏற்றுள்ள அன்வார் இப்ராகிமுடன் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தேன்.
"அன்வாரை பல ஆண்டுகளாகத் தெரியும். கடைசியாக 2018ல் நாங்கள் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசியுள்ளோம். அந்தச் சமயத்தில் சிங்கப்பூர்-மலேசிய இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து சிங்கப்பூர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்," என்று தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் லீ நினைவுகூர்ந்தார்.
"சிங்கப்பூரும் மலேசியாவும் நெருங்கிய பங்காளிகள். வலுவான வரலாறு, கலாசாரம், இரு நாடு களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவு போன்றவற்றின் அடிப்படையில் நமது நாடுகள் நீண்டகால நட்பைக் கொண்டுள்ளன. பரஸ்பர நன்மைகளுக்காக இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த இன்னும் அதிகம் செய்ய முடியும்," என்று திரு லீ சொன்னார்.
சமூக ஊடகம் வழியாக நேற்று பிரதமர் லீக்கு பதிலளித்திருந்த திரு அன்வார், தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த தற்காக நன்றி கூறினார்.
நெருங்கிய அண்டை நாடு களாக, ஆசியானின் பங்காளி களாக மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒன்றையொன்று பின்னிப் பிணைந்த வரலாறு, நெருக்கமான, மக்களுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டி யிருந்தார். "கூடிய விரைவில் உங்களைச் சந்தித்துப் பேசுவேன்," என்று தமது பதிவில் அன்வார் குறிப்பிட்டு இருந்தார்.

