சிங்கப்பூரில் பெரும்பாலான குடும்பங்கள் வீட்டு அடமானக் கடனை அடைக்கும் நிலையில் இருக்கின்றன. அதேவேளையில், வட்டி விகிதமும் பணவீக்கமும் அதிகமாக இருப்பதால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ள ஏதுவாக கடன் வாங்குவோர் மிகவும் விவேகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
வேலையின்மை விகிதம் குறைவாகவே இருந்து வருகிறது. சம்பளம் தொடர்ந்து கூடுகிறது. ஆகையால், பெரும்பாலான குடும்பங் களுக்கு வீட்டுக் கடனை அடைப்பது உள்ளிட்ட செலவுகளை ஈடுசெய்ய போதிய நிதிவளம் இருக் கும் என்று ஆணையம் தன்னுடைய நிதிவள நிலைப்பாட்டு மறுபரிசீலனை 2022 அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால், பணவீக்கம் கூடுவதால் செலவு அதிகரிக்கிறது. வட்டி விகிதமும் கூடுகிறது. இத்தகைய நிலையில், சில குடும்பங்களுக்கு நிதிப்பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
ஆகையால் வீட்டுக் கடனை அடைப்பது அந்தக் குடும்பங் களுக்குச் சிரமமாகிவிடலாம் என்று ஆணையம் எச்சரித்தது.
எனவே குடும்பங்கள் மிகவும் விவேகமாக நடந்து கொண்டு தங்களுடைய நிதி வளங்களை நிர்வகிக்க வேண்டும் என்று நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில் ஆணையம் தெரிவித்து உள்ளது.
உலகில் வட்டி விகிதம் அதிகரிக்கிறது. அதற்கேற்ப சிங்கப்பூரிலும் வட்டி விகிதங்கள் அதிகரித்து இருக்கின்றன. இதனால், கடனை அடைப்பதற்கு அதிக செலவிட வேண்டிய நிலையை சிங்கப்பூர் குடும்பங்கள் எதிர்நோக்குகின்றன.
இருந்தாலும்கூட பெரும்பாலான குடும்பங்களைப் பொறுத்தவரை அவ்வளவாகப் பாதிப்பு இருக்காது என்பது ஆணையத்தின் பரிசோதனைக் கணக்கீடுகள் மூலம் தெரிய வருகிறது. வீட்டுக் கடனை அடைக்க இயலாமல் போகும் குடும்பங்களின் விகிதாச்சாரம் தொடர்ந்து குறைவாகவே இருந்து வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் குடும்பங்களின் இருப்பு நிலை குறிப்பு பற்றிய கண்ணோட்டத்தையும் ஆணையம் வெளியிட்டது.
நிகரச் சொத்து சென்ற ஆண்டில் இருந்து 7.5% அதிகரித்து $2.5 டிரில்லியனாகக் கூடியது. குடியிருப்புச் சொத்துகள் 5.3% உயர்ந்தன. இதன் காரணமாக மொத்த குடும்ப சொத்துகள் ஒட்டு மொத்தமாக 6.9% அதிகரித்தன.
இருந்தாலும் கொவிட்-19 தொடர்பான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து குடும்பச் செலவுகள் கூடி இருக்கின்றன.
இதனால் தனிநபர் சேமிப்பு விகிதம் 2022 மூன்றாவது காலாண்டில் 35% ஆகக் குறைந்து இருக்கிறது. இது 2021 முதல் காலாண்டில் 40% ஆக உச்சத்தில் இருந்தது. இதேவேளையில், குடும்பங் களின் கடன் சுமை தொடர்ந்து அதிகரிக்கிறது. வீட்டுக்கடன் நிலையாகக் கூடிவருவதே இதற்கான காரணம். 2022, 3வது காலாண்டில் குடும்பக் கடன் 3.1% கூடியது. இதில் 2.7% வீட்டு கடனாகும். உலகம் முழுவதும் அதிக பணவீக்கம் நிலவுவதால் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஆணையம் கூறியது.

