துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மக்கள் செயல் கட்சியில் (மசெக) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துணைத் தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மசெகவின் மத்திய செயற்குழு இன்று சனிக்கிழமை கூடியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங்குடன் சேர்த்து, இப்போது தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் மசெக உதவி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மசெகவின் 37வது மத்திய செயற்குழுவில் மேலும் நான்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக மசெக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ஜுனிட் குழுத்தொகுதியின் அலெக்ஸ் இயோ, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரல் சான், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோர் அந்த நால்வர்.
இந்த மாதத் தொடக்கத்தில் மசெக அதன் மத்திய செயற்குழுவைத் தேர்வு செய்தது. ரிசார்ட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் 3,000க்கும் அதிகமான கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.