கோலாலம்பூர்: மலேசியாவின் பாஸ் கட்சி, தமது தலைமையிலான ஐக்கிய அரசாங்கத்தில் சேரும்படி புதிய பிரதமர் அன்வார் இப்ராகிம் விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துள்ளது. பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் சேர்ந்து தானும் எதிர்க்கட்சியாகச் செயல்படப் போவதாக அது தெரிவித்தது.
பெரும்பான்மை மக்களின், குறிப்பாக பெரிக்கத்தானுக்கு வாக்களித்தவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கப் போவதாக பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் நேற்று கூறினார். மலேசியப் பொதுத் தேர்தலில் 49 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் அரசாங்கம் அமையாததால், மலேசிய மாமன்னர் கடந்த 25ஆம் தேதி பக்கத்தான் ஹரப்பான் தலைவர் அன்வார் இப்ராகிமை புதிய பிரதமராக நியமித்தார்.
நேற்றுமுன்தினம் பதவியேற்ற பின்னர், ஐக்கிய அரசாங்கம் அமைய வேண்டும் என்ற மாமன்னரின் விருப்பப்படி, தமது அரசில் சேருமாறு திரு அன்வார் பெரிக்கத்தானுக்கு அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை பெரிக்கத்தான் ஏற்கப் போவதில்லை என்றும் அது எதிர்த்தரப்பாகவே செயல்படும் என்றும் கூட்டணித் தலைவர் முகைதீன் யாசின் அன்றே திட்டவட்டமாகக் கூறினார்.
ஆனால் திரு அன்வார் விடுத்த அழைப்பை பாஸ் கட்சி பரிசீலிக்கும் என்று திரு தக்கியுடின் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
பாஸ் கட்சியின் நேற்றைய முடிவை அடுத்து, பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி மட்டுமே மலே சியாவின் எதிர்த்தரப்பாகச் செயல்படும் என்று தெரிகிறது.
பாஸ் கட்சி யும் திரு முகைதீனின் பெர்சத்து கட்சியும் பெரிக்கத்தானின் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன.
முன்னதாக, பக்கத்தான் ஹரப்பானுடன் இணைந்து ஐக்கிய அரசாங்கத்தை அமைக்குபடி மாமன்னர் முன்வைத்த பரிந்துரையை திரு முகைதீன் கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரித்து விட்டார்.
பாரிசான் நேஷனல் எனப்படும் தேசிய முன்னணி, சரவாக் கட்சியான ஜிபிஎஸ், ஏனைய சில கட்சி கள், தன்னிச்சையாகப் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகிய தரப்புகளின் ஆதரவுடன் திரு அன்வார் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்.
தனது கூட்டணி பெற்ற 82 இடங்களையும் சேர்த்தால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான இடங்கள் திரு அன்வாரின் வசமுள்ளன.
டிசம்பர் 19ஆம் தேதி நாடாளுமன்றக் கீழவை கூடும்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், பெரிக்கத்தானில் இடம்பெற்றுள்ள சரவாக்கைச் சேர்ந்த ஜிஆர்எஸ் கட்சி, திரு அன்வாரின் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக நேற்று தெரிவித்தது.
ஆனால் தமது கட்சிக்கு துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டதாக வந்த செய்தியை ஜிஆர்எஸ் கட்சியின் தலைவர் ஹாஜி நூர் மறுத்தார்.
மேலும் செய்திகள்: பக்கம் 8

