துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மக்கள் செயல் கட்சியின் (மசெக) துணைத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைமைச் செயலாளர் மசெகவில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியாகும். அக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடிய பின்னர் அது குறித்து அறிவிக்கப்பட்டது.
மசெகவின் உதவித் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு வகித்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ சியட், கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, உதவித் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன், கல்வி அமைச்சர் சான் சுன் சிங் மசெகவின் உதவித் தலைமைச் செயலாளராகத் தொடர்ந்து பொறுப்பேற்பார்.
கட்சியின் தலைமைத்துவத்தைப் புதுப்பிக்கும் திட்டத்துக்கு ஏற்ப, புதிய துணைத் தலைமைச் செயலாளர் பதவி, இரண்டு உதவித் தலைமைச் செயலாளர் பதவிகள் ஆகியவற்றுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மசெக நேற்று தெரிவித்தது.
தலைமைச் செயலாளர் இல்லாத நேரத்தில், துணைத் தலைமைச் செயலாளர் அவரது பணி களையும் பொறுப்புகளும் கவனிப்பார் என்று மசெக கூறியது.
பிரதமர் லீ சியன் லூங், மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் ஆவார்.
மசெகவின் மத்திய செயற்குழு, நான்கு புதிய உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டுள்ளது.
அல்ஜுனிட் குழுத்தொகுதியில் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அலெக்ஸ் இயோ, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சான், தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோர் அந்த நால்வர்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகிய இருவர் ஏற்கெனவே மசெகவின் மத்திய செயற்குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மத்திய செயற்குழுவுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் அவர்கள் இருவரும் முறையே 13வது, 14வது ஆக அதிகமான வாக்கு களைப் பெற்றிருந்தனர்.
திரு டோங்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பொருளாளராகவும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் துணைப் பொருளாளராகவும் செயல்படுவர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கட்சியின் துணைத் தலைவராகத் தொடர்வார்.
மேலும், திரு லாரன்ஸ் வோங்குக்கு கட்சித் தலைமையகத்தின் செயல்குழுத் தலைவர் எனும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. முந்திய தலைவரான திரு சான் சுன் சிங், துணைத் தலைவராக செயல்படுவார்.
மசெகவின் மூத்தோர் குழுத் தலைவர் பொறுப்பை திரு டெஸ்மண்ட் லீக்கு பதில், மனிதவள அமைச்சர் டான் ஏற்றுள்ளார்.
கட்சியின் மகளிர் அணித் தலைவராக வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கெனவே அப்பொறுப்பை ஏற்றிருந்த ஜோசஃபின் டியோ, கட்சியின் கொள்கைக் கருத்தரங்கின் ஆலோசகராகச் செயல் படுவார். அது திரு வோங் ஏற்றிருந்த பொறுப்பாகும்.
இம்மாதத் தொடக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில், மசெக உறுப்பினர்கள் மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

