சட்ட, உள்துறை அமைச்சர்
கா சண்முகம் நேற்று அவரது தொகுதியான நீ சூன் குழுத் தொகுதியில் நடைபெற்ற உடற்கட்டு நிகழ்வு ஒன்றில் 125 கிலோ கிராம் எடை தூக்கி எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
மேலும், இதற்கு முன்னர் 105 கிலோ என்னும் தமது சொந்த சாதனையை நேற்று அவர் முறியடித்தார். 63 வயதாகும் அமைச்சரின் உடல் எடை 62 கிலோவுக்கும் 63 கிலோவுக்கும் இடைப்பட்டது. தமது உடல் எடையைக் காட்டிலும் கிட்டத்தட்ட இருமடங்கிற்கும் அதிக மான எடையை நேற்று அவர் தூக்கினார்.
இச்செயலைத் தொடங்கும் முன்னர் திரு சண்முகத்திற்கு அவரது பயிற்றுவிப்பாளர் 90 கிலோ, 100 கிலோ, 110 கிலோ என்று படிப்படி யாக எடையை அதிகரித்தார்.
ஒவ்வொரு முறையும் எடை தூக்கிய பின்னர் அமைச்சர் சற்று ஓய்வெடுத்துக்கொண்டார். இறுதியாக 125 கிலோ எடையை அவர் தூக்கினார். உடனே அங்கிருந்த பொதுமக்களும் பயிற்றுவிப்பாளரும் கைதட்டி அமைச்சரை வாழ்த்தினர்.
இதற்கு மேல் அதிக எடைக்கு ஆசைப்படவில்லை என்று கூறிய அவர், தற்பெருமைக்காக இதனைச் செய்யவில்லை என்றும் எடை தூக்குவதால் எலும்பு பலமடைவதோடு தசைகள் இறுகும் என்றும் கூறினார்.
ஆரோக்கியமான உடலைப் பேண ஒவ்வொருவரையும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வைப்பதே தமது நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

