மலேசியாவுக்கு நேற்று அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட புருணை மன்னர் ஹசனல் போல்கியா, புதிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
நேற்று காலை சுபாங்கில் உள்ள மலேசிய ஆகாயப் படை தளத்தில் புருணை மன்னரின் விமானம் தரை இறங்கியது. புருணை மன்னரையும் அவருடன் இருந்த புருணை
இளவரசர் அப்துல் மட்டீன்
போல்கியாவையும் பிரதமர்
அன்வார் நேரில் வரவேற்றார்.
மூவரையும் புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அதிகாரபூர்வ கார் காத்திருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஓட்டுநர் இருக்கையில் புருணை மன்னர் அமர்ந்துகொண்டார். அவருக்குப் பக்கத்தில் பிரதமர் அன்வார் அமர்ந்தார்.
புருணை இளவரசர் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
ஆகாயப் படை தளத்திலிருந்து கிட்டத்தட்ட 41 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஸ்ரீ பெர்டானாவுக்குப் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ, புருணை மன்னர் காரை ஓட்டிச் செல்ல, சன்னலைக் கீழிறக்கி செய்தியாளர்களிடம் கை அசைத்து விடைபெற்றுக்கொண்டார் பிரதமர் அன்வார்.
ஸ்ரீ பெர்டானாவை புருணை மன்னர் அடைந்ததும், மலேசிய ராணுவம் தலைமையிலான மரியாதை காவல் அணி அவருக்கு மரியாதை தெரிவித்து அணி
வகுத்தது.
மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகம்மது ஸுக்கி அலியும் புருணை மன்னரை வரவேற்றார். மலேசியாவின் பத்தாவது
பிரதமராக திரு அன்வார் பதவி ஏற்ற பிறகு, புருணை மன்னரை அவர் சந்திப்பது இதுவே முதல்முறை.
புருணை மன்னருக்கும் இளவர
சருக்கும் பிரதமர் அன்வார் மதிய விருந்து அளித்து கௌரவப்படுத்தி னார்.
இதற்கு முன்பு ஆகக் கடைசியாக புருணை மன்னர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதி வரை மலேசியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டதாக மலேசியப்
பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
மலேசியாவுக்கும் புருணைக்கும் இடையே நீண்டகால, சிறப்பு நட்புறவு இருந்து வருவதாகவும் ஒரே மாதிரியான மரபுடைமை மற்றும் கலாசாரம் இருப்பதாகவும் அது கூறியது.
பிரதமர் அன்வாரும் புருணை மன்னரும் நேற்று இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் அதை மீண்டும் உறுதி செய்தனர்.
இரு தலைவர்களும் பங்கேற்ற கலந்துரையாடலின்போது மலேசியாவுக்கும் புருணைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது.
பரஸ்பர பலனை மேம்படுத்துவது தொடர்பாகவும் இருவரும் பேசினர்.