சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது
சிங்கப்பூரில் பல ஆண்டு காலமாக நடப்பில் இருந்து வந்த ஒரு சட்டப் பிரிவை ரத்து செய்ய சம்மதித்து நேற்று நாடாளுமன்றம் வாக்களித்தது.
அந்தச் சட்டப்பிரிவு இதுநாள் வரை ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவை சட்டவிரோதமான செயல் என்று வகைப்படுத்தி வந்தது.
தண்டனை விதித் தொகுப்பின் 377A பிரிவை ரத்து செய்தவற்கான முடிவு நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்களாக நடந்து வந்த 10 மணி நேர விவாதத்தை அடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேவேளையில், திருமணம் பற்றிய இப்போதைய நடப்பு வரைமுறையை பாதுகாப்பதற்கான அரசமைப்புச் சட்ட மாற்றங்களை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து அந்த வரைமுறைக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை அணுகமுடியாது.
377A சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு 93 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த அல்ஜுனிட் குழுத்தொகுதியின் உறுப்பினரான ஜெரால்டு ஜியாம், ஹவ்காங் உறுப்பினரான டெனிஸ் டான், நியமன உறுப்பினரான ஹுன் ஹியான் டெக் ஆகிய மூன்று பேர் மட்டுமே ரத்து செய்யக் கூடாது என்று வாக்களித்தனர்.
அரசமைப்புச் சட்டத்தில் 156 என்ற ஷரத்தைச் சேர்க்கும் வகை யில், அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென 85 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா உறுப்பினர்கள் இருவரும் எதிர்த்தனர். அல்ஜுனிட் குழுத்தொகுதியைச் சேர்ந்த பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த சில்வியா லிம், செங்காங் குழுத்தொகுதியைச் சேர்ந்த ஹி டிங் ரு இருவரும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அரசமைப்புச் சட்ட திருத்தங்களைப் பொறுத்தவரை, நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் கிடையாது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
திருமணம் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதற்குப் பதிலாக அந்த அதிகாரத்தைக் கொண்ட அமைப்பு நாடாளுமன்றம்தான் என்பதை மன்றத்தின் ஒட்டுமொத்த குரல் வெளிப்படுத்தி இருப்பதாக அமைச்சர் கூறினார்.
விவாதத்தின்போது அதில் கலந்துகொண்டு பேசிய உறுப்பினர்கள் பலரும் 377A சட்டப் பிரிவை ரத்து செய்வதால் கலாசாரப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கவலை தெரிவித்தனர்.
வேறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களுக்கு கதவை மூடிவிடக்கூடிய நடைமுறைக்கு இது வழிவகுத்துவிடும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், இணையத்தில் இடம்பெறக்கூடிய இத்தகைய இயக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கையாள உதவும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
பிரிவு 377A பிரிவின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டோர் இப்போது யாராவது உண்டா என்பதன் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர், சிலர் இருப்பதாகத் தெரிவித்தனார்.
இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் வயது வராதவர்கள் தொடர்பில் செயல்பட்டவர்களாக அல்லது பொது இடங்களில் பாலியல் செயல்களில் ஈடுபட்டவர்களாக உள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.
இதனிடையே, தண்டனை விதித்தொகுப்பின் 377A பிரிவை ரத்து செய்யும் முடிவையும் திருமண வரையறை தொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு இருப்பது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரை பொறுத்தவரை இது ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் வர்ணித்தார்.
"ஆடவர்களுக்கு இடையிலான பாலியல் உறவுகள் இனிமேல் குற்றம் என்று கருதப்படாது. அதேவேளையில், ஆண், பெண் திருமண வரையறையையும் நாம் பாதுகாக்கிறோம்.
"இவற்றை சேர்த்துப் பார்க்கையில் சமநிலையான ஓர் அணுகுமுறை காணப்பட்டுள்ளது. இது முன்னோக்கிச் செல்வதற்கான விவேகமான முயற்சிகள்," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"இதைவிட முக்கியமாக, இந்த இணக்கத்தை ஒன்றாகச் சேர்ந்து அமைதியான முறையில் நாம் சாதித்து இருக்கிறோம்.
"எல்லா தரப்புகளுமே கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து இருக்கின்றன. ஒருவர் கூறுவதை மற்றொருவர் செவிமடுத்து இருக்கிறார். நல்ல பலனைச் சாதிக்கும் வகையில் விட்டுகொடுத்து நடந்துகொள்ளும் அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்," என்று திரு லீ தெரிவித்தார்.
இதைச் சாதிக்க பல மாத காலமாக கடுமையாகப் பாடுபட்ட அனைவருக்கும் தான் நன்றி கூறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.

