தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரும் நியூயார்க்கும் உலகின் ஆக செலவுமிக்க நகர்கள்: ஆய்வு

2 mins read

சிங்­கப்­பூ­ரும் நியூ­யார்க்­கும் உல­கின் ஆக செல­வு­மிக்க நகர்­கள் எனும் பெய­ரைப் பெற்­றுள்­ளன.

லண்­ட­னைச் சேர்ந்த 'இக்­கா­னோ­மிஸ்ட் இன்டெ­லி­ஜன்ஸ் யூனிட்' நடத்­திய 'உல­க­ளா­விய வாழ்க்­கைச் செல­வி­னம்' குறி­யீடு எனும் வருடாந்திர ஆய்வு ஒன்­றில் இவ்விரு நகர்­களும் முத­லி­டத்­தில் உள்­ளன.

முன்­ன­தாக, இப்­பட்­டி­ய­லில் முதலி­டத்தில் இருந்த இஸ்­ரே­லின் டெல் அவிவ் நகர் இப்போது கீழே இறங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது.

உக்­ரே­னில் நில­வி­வ­ரும் போரும் கொவிட்-19 பெருந்­தொற்­றுக் கட்டுப்­பா­டு­களும் விநி­யோ­கத் தொட­ரைப் பாதித்­துள்ள நிலை­யில், உல­கின் ஆகப் பெரிய நகர்­களில் விலை­வாசி கிடு­கி­டு­வென உயர்ந்­துள்­ளதை ஆய்வு காட்­டி­யது.

உல­கின் ஆக செல­வு­மிக்க நகர்­கள் பட்­டி­ய­லில் நியூ­யார்க் முத­ல் இடத்தில் இருப்­பது இதுவே முதன்­முறை.

சிரியாவின் தலை­ந­கர் டமாஸ்­கசும் லெப­னா­னின் டிரிப்­போலி நகரும் மிக­வும் செலவு குறைந்த நகர்­க­ளாக தொடர்ந்து நீடிக்­கின்­றன.

கடந்த ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்­களில் நடத்­தப்­பட்ட இந்த ஆய்­வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 172 நகர்­களில் விலை­வாசி சரா­சரி­யாக 8.1 விழுக்­காடு உயர்ந்­து உள்ளது.

இப்­பட்­டி­ய­லில் நகர்­க­ளின் தர­வரி­சை­யில் வலு­வான அமெ­ரிக்க டால­ரின் தாக்­கத்­தை­ம் ஆய்வு காட்­டி­யது. உல­கம் முழு­வ­தும் 50,000 பொருள்­க­ளின் விலை டால­ருக்கு மாற்­றப்­பட்­டது.

பண­வீக்­கத்­தைத் தணிக்க, அமெ­ரிக்க மத்­திய வங்கி வட்டி விகி­தத்­தைக் கணி­ச­மாக உயர்த்­தி­யுள்­ள­தைத் தொடர்ந்து இவ்­வாண்டு அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு கூடி­யுள்­ளது.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வின் லாஸ் ஏஞ்­ச­லிஸ், சான் ஃபிரான்­சிஸ்கோ நகர்­களும் முதல் 10 இடங்­க­ளுக்­குள் வந்­தன.

குறிப்­பி­டும்­ப­டி­யாக, ரஷ்­யத் தலை­ந­கர் மாஸ்­கோ­வும் செயிண்ட் பீட்­டர்ஸ்­பர்க் நக­ரும் பட்­டி­ய­லில் வேக­மாக மேலே வந்துள்ளன.

மாஸ்கோ 88 இடங்­களும் செயிண்ட் பீட்­டர்ஸ்­பர்க் 70 இடங்­களும் மேலே­றின. ரஷ்யா மீது மேற்­கத்­திய நாடு­கள் தடை­கள் விதித்­துள்­ள­தால் ரஷ்­யா­வின் பல நகர்­களில் விலை­வாசி உயர்ந்­துள்­ளது.

இந்த ஆய்­வுக்­குத் தலைமை தாங்­கிய திரு­வாட்டி உப­சனா டட், "உக்­ரேன் போர், ரஷ்யா மீதான மேற்­கத்­திய நாடு­க­ளின் தடை விதிப்பு, கொவிட்-19 தொடர்­பில் சீனா­வின் கடு­மை­யான கொள்­கை­கள் ஆகி­யவை விநி­யோ­கத் தொட­ருக்கு இடை­யூறு விளை­வித்­துள்­ளன.

"அவற்­று­டன் சேர்த்து, வட்டி விகித உயர்­வும் நாண­யப் பரி­வர்த்­தனை விகி­தத்­தில் ஏற்­பட்­டுள்ள மாற்­ற­மும் உல­கம் முழு­வ­தும் பல நாடு­களில் விலை­வா­சியை உயர்த்­தி­யுள்­ளன," என்று கூறி­னார்.

"இவ்­வாண்­டின் வாழ்க்­கைச் செல­வி­னக் குறி­யீட்­டில், விலை­வாசி உயர்வைத் தெளி­வா­கப் பார்க்க முடி­கிறது. எங்­க­ளி­டம் உள்ள 20 ஆண்டு­காலத் தர­வில், 172 நகர்களில் சரா­சரி விலை­வாசி இவ்வளவு உயர்ந்­தி­ருப்­பது இதுவே முதன்­முறை," என்­றும் அவர் சொன்­னார்.

உலகின் ஆக செலவுமிக்க நகர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த நகர்கள்:

1. சிங்கப்பூர்/நியூயார்க்

3. டெல் அவிவ்

4. ஹாங்காங்/லாஸ் ஏஞ்சலிஸ்

6. ஸூரிக்

7. ஜெனிவா

8. சான் ஃபிரான்சிஸ்கோ

9. பாரிஸ்

10. கோப்பன்ஹேகன்