உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆகச் சவாலான பிரிவாக அமைந்த 'இ' பிரிவில் ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய அணிகளைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி காற்பந்து உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது ஜப்பான்.
ஜப்பானிடம் 2-1 எனும் கோல் கணக்கின் ஸ்பெயின் தோற்றது. எனினும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் 'இ' பிரிவில் ஜெர்மனிக்குப் பதிலாக இரண்டாம் நிலையைப் பிடித்தது ஸ்பெயின். இதனால், 2014 உலகக் கிண்ண வெற்றியாளரான ஜெர்மனி, கோஸ்டா ரிக்காவை 4-2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தும் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.
எனினும், நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற ஜப்பான்-ஸ்பெயின் ஆட்டத்தில் ஜப்பான் தரப்பில் போடப்பட்ட இரண்டாவது கோல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோல் செல்லுபடியாகும் என்று 'விஏஆர்' தொழில்நுட்பம் கூறியிருப்பது தவறு என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து கூறினர். குறிப்பாக, அந்த கோலே ஜெர்மனி இப்போட் டியிலிருந்து வெளியேற வித்திட்டது.
ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் ஜப்பானின் ஆவோ தனாக்கா கோல் போட்டு அந்த அணிக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தார். ஆனால், அவரிடம் கவ்ரு மிட்டோமா பந்தை அனுப்புவதற்கு முன்பு பந்து எல்லைக்கோட்டைத் தாண்டிவிட்டதுபோல தெரிந்தது.
எனவே, அந்த கோல் செல்லுபடியாகும் என்று தொடக்கத்தில் நடுவர் ஒப்புதல் அளிக்கவில்லை. பந்து எல்லைக்கோட்டைத் தாண்டியதா என்பதை அதிகாரிகள் சரிபார்த்தனர். 'விஏஆர்' திரையில் அந்தக் காட்சிகளைத் தீவிரமாக ஆராய்ந்த பிறகே ஜப்பானுக்குச் சாதகமாக அதிகாரிகள் பச்சைக் கொடி காட்டினர்.
'விஏஆர்' தொழில்நுட்பத்தைக் கொண்டு சரிபார்த்தபோது, எல்லைக்கோட்டை பந்து முழுவதுமாக தாண்டவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், சமூக ஊடகங்களில் வலம் வந்த படங்களில், எல்லைக்கோட்டை பந்து தாண்டிவிட்டதுபோல தெரிகிறது. இதனால் சர்ச்சை மூண்டது.
எது எப்படியோ, 'இ' பிரிவு வெற்றியாளராக ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருப்பதை அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.