கனமழை காரணமாக நேற்றைய 'ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்' நெடுந்தொலைவு ஓட்டத்தின் (எஸ்சிஎஸ்எம்) அரை, முழு மாரத்தான் அங்கங்கள் ஒரு மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு தொடங்கின. இருப்பினும், 2019க்குப் பிறகு மீண்டும் இவ்வாண்டு முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பத்தாயிரக்கணக்கானோர் உற்சாகம் குறையாமல் பங்கேற்றனர்.
கென்யாவில் கோழிப் பண்ணை வைத்திருக்கும் 34 வயது எஸக்கியல் ஓமுல்லோ, நேற்றைய ஆண்கள் பிரிவு ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். கொவிட்-19 கிருமிப் பரவலால் போட்டிகள் நின்றுபோனதைக் குறிப்பிட்ட அவர், போட்டிகள் இல்லையென்றால் ஈராண்டுக்கு பரிசுத் தொகையும் இல்லை என்றாகிவிட்ட நிலைமையை நினைவுகூர்ந்தார்.
முதல்முறையாக இவ்வாண்டின் எஸ்சிஎஸ்எம் போட்டியில் பங்கேற்ற அவர், தம் கைக்கு $10,000 காசோலை வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
அவரின் பிரிவில் அடுத்தடுத்த நிலைகளிலும் கென்யாவைச் சேர்ந்தவர்கள் இடம்பிடித்தனர். அத்துடன் பெண்கள் பிரிவிலும் கென்யாவைச் சேர்ந்த மாதர் முதல் மூன்று நிலைகளில் வந்திருந்தனர்.
நேற்றுக் காலை 4.30 மணிக்குத் தொடங்கவிருந்த ஓட்டம், 5.30 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிப்பாளர்கள் கூறியபோது வந்திருந்தோர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
மரினா பே வட்டாரத்தில் நடந்த இவ்வாண்டின் எஸ்சிஎஸ்எம், கிட்டத்தட்ட 40,000 ஓட்ட வீரர்களை ஈர்த்துள்ளது. அவர்கள் 5 கிமீ, 10 கிமீ, 21.1 கிமீ, 42 கிமீ ஆகிய பிரிவுகளின்கீழ் பங்கேற்றனர்.
கலந்துகொண்ட 5,000 அனைத்துலக பங்கேற்பாளர்களில் பாலிவுட் நடிகர் மில்லின் சோமன், 57, மற்றும் அவரின் மனைவியான 31 வயது அங்கீதா கொன்வாரும் அடங்குவர். எஸ்சிஎஸ்எம்மின் 5 கிமீ, அரை மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பதற்காக இருவரும் இந்தியாவிலிருந்து விமானம் வழியாக வந்துள்ளனர்.

