உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆகப் பெரிய சவாலை இங்கிலாந்து சந்திக்கவிருப்பதாக அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் கூறியுள்ளார்.
இப்போட்டியின் காலிறுதிச் சுற்றில் வரும் சனிக்கிழமை பின்னிரவு 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் பிரான்சுடன் பொருதுகிறது இங்கிலாந்து.
நேற்று பின்னிரவு 3 மணிக்கு நடந்த 'கடைசி 16 அணிகள்' சுற்றில் செனகலை 3-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
நேற்று இரவு 11 மணிக்கு நடைபெற்ற வேறோர் ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் போலந்தை பிரான்ஸ் தோற்கடித்தது.
இந்நிலையில், காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்து-பிரான்ஸ் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.
1958லும் 1962லும் பிரேசில் தொடர்ச்சியாக இருமுறை உலகக் கிண்ணத்தை வென்றது. அதற்குப் பிறகு கிண்ணத்தைத் தக்கவைக்கும் முதல் அணி என்ற பெருமையைப் பெற முனைப்புடன் உள்ளது பிரான்ஸ்.
செனகலுக்கு எதிரான ஆட்டத்தில் சற்று தடுமாற்றத்துடன் தொடங்கினாலும் நேரம் செல்ல செல்ல தன்னம்பிக்கையுடன் விளையாடத் தொடங்கியது இங்கிலாந்து. அதன் முயற்சிக்கு ஆட்ட முடிவில் பலனும் கிடைத்தது.
ஆனால், இங்கிலாந்துக்கு முன்னால் இப்போது அடுத்துவரும் தடைக்கல்லே பெரிய தடைக்கல் என்பதை சவுத்கேட் அறிந்து வைத்துள்ளார்.
காற்பந்து உலகின் வலுவான அணிகளில் ஒன்றாகத் திகழ்கிறது பிரான்ஸ்.
இவ்வாண்டிலும் உலகக் கிண்ணத்தை வெல்லும் சூழல் பிரான்ஸ் அணியைச் சூழ்ந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் ஜோர்டன் ஹெண்டர்சன், ஹேரி கேன், புகயோ சாக்கா போன்ற திறமைபடைத்தவர்கள் உள்ளனர்.
இருப்பினும், பிரான்ஸ் அணியினர் தரத்தில் ஒருபடி மேல் என்பதை நன்கு உணர்ந்துள்ளார் சவுத்கேட்.
எனவேதான், இந்த ஆட்டம் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சோதனையான ஆட்டம் என்கிறார் சவுத்கேட். இருப்பினும் பிரான்சை இங்கிலாந்து எதிர்கொண்டே ஆகவேண்டும்.
"பிரான்ஸ் அணியினர் உலகத் தரம்வாய்ந்த வீரர்கள். அவர்களை எதிர்கொண்டு கோல் போட்டு சாதிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றுதான். இருந்தாலும் நாம் களமிறங்கியே ஆக வேண்டும்," என்று சவுத்கேட் தனது அணியினருக்கு உற்சாகமூட்டியுள்ளார்.
இதை ஒரு மிகப்பெரிய சவாலாக நாம் எதிர்கொள்ளவேண்டும். கடந்த காலங்களில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிகளுடன் இதை ஒப்பிடலாம்.
அப்படிப்பட்ட அற்புதமான இந்தப் போட்டியில் பலம்வாய்ந்த இங்கிலாந்தும் பிரான்சும் மோதுவதே என்று சவுத்கேட் தன் அணியினருக்குக் கூறியுள்ளார்.
இந்நிலையில், கத்தாரில் நடந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்துக்கு எதிராக பிரான்ஸ் வெற்றி பெறச் செய்ததை அடுத்து, இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றாக வேண்டும் என்ற தனது கனவு நனவாக வேண்டும் என்பதே தனது வெறி என்று கிலியோன் எம்பாப்பே கூறினார்.
2022 உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு இந்தப் போட்டியில் திறம்பட விளையாடும் வகையில் உடலளவிலும் மனதளவிலும் தான் தயாராக உள்ளதாக மார்தட்டியுள்ளார்.
"எங்களின் இலக்கை நோக்கிச் செல்லும் எங்களுடைய பாதை இதுவரையிலும் சரியாகவே உள்ளது," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் எம்பாப்பே.
இதுவரை நடந்த நான்கு ஆட்டங்களில் ஐந்து கோல்களைப் போட்டுள்ளார் பிரான்சின் நட்சத்திர ஆட்டக்காரர் எம்பாப்பே.