'ஹாட்ரிக்' நாயகன் ராமோசின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை பந்தாடியது போர்ச்சுகல்

'ஹாட்ரிக்' நாயகன் ராமோசின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை பந்தாடியது போர்ச்சுகல்

fallback-0
Portugal's Goncalo Ramos celebrates scoring their first goal REUTERS போர்ச்சுகலின் முதல் கோலைப் போட்டு கொண்டாடும் கொன்சாலோ ராமோஸ். படம்: ராய்ட்டர்ஸ்

07 Dec 2022 - 4:17 pm

1 mins read

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நேற்று பின்னிரவு நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 6-1 எனும் கோல் கணக்கில் பந்தாடியது போர்ச்சுகல்.

16 ஆண்டுகளில் முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் மின்னியவர் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்ல. மாறாக, தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் களமிறங்கிய 21 வயது இளம் வீரர் கொன்சாலோ ராமோஸ் 'ஹாட்ரிக்' கோல்கள் போட்டு அசத்தினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் வரிசையில் 37 வயது ரொனால்டோ இடம்பெறவில்லை. அவறுக்குப் பதிலாக ராமோஸ் களமிறங்கினார்.

உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு நடந்த நட்புமுறை ஆட்டத்தில்தான் ராமோஸ் முதன்முறையாக அணியில் இடம்பெற்றார்.

நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு இப்போட்டியில் மாற்று ஆட்டக்காரராக 10 நிமிடங்கள் மட்டுமே விளையாடினார் ராமோஸ். ஆனால், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய அவர், தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை மிக நன்றாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் 72வது நிமிடத்தில்தான் ராமோசுக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரராக ரொனால்டோ களமிறங்கினார். அப்போது ரசிகர் பட்டாளம் ரொனால்டோவை வரவேற்கும் விதமாக ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர்.

ஆனால், ஆட்டம் முடிவடைய இருபதே நிமிடங்கள் இருந்த நிலையில், ரொனால்டோவால் ஆட்ட நிலவரத்தில் பெரிதாக மாற்றம் செய்ய முடியவில்லை. போர்ச்சுகல் போட்ட ஆறு கோல்களில் ஒன்றுகூட ரொனால்டோவுக்கு சொந்தமானது இல்லை.

இந்நிலையில், காலிறுதிச் சுற்றில் மொரோக்கோ அணியுடன் போர்ச்சுகல் பொருதுகிறது.