அதிகரிக்கும் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய பொதுப் பயனீட்டுக் கழகம் திட்டம்
வடமேற்கு சிங்கப்பூரில் குடியிருப்புகளுக்கான நீர்த்தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அதனைப் பூர்த்தி செய்ய ஏதுவாக புதிய சேவை நீர்த்தேக்கத்தைக் கட்ட பொதுப் பயனீட்டுக் கழகம் திட்டமிட்டு வருகிறது. வரும் 2029ஆம் ஆண்டில் தொடங்கி, நான்கு ஆண்டுகளில் அந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்படும்.
பயனீட்டாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்குமுன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது அந்நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும்.
மண்டாயில் சாத்தியமுள்ள இரு இடங்களில் ஏதேனும் ஒன்றில் அதனை அமைப்பது குறித்து ஆராயப்படும் என்று கழகத்தின் பேச்சாளர் கூறினார். அவ்விரு இடங்களுமே காட்டுப்பகுதிகள்தான்.
லிம் சூ காங், சுங்கை காடுட், ஜூரோங் லேக் வட்டாரம் போன்ற இடங்களில் அமையவிருக்கும் வீடமைப்புத் திட்டங்களால் குடிநீருக்கான தேவை அதிகமாகும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எதிர்பார்க்கிறது.
குடிநீர்த் தேவை ஏற்ற இறக்கமாக இருக்கும்போது சேவை நீர்த்தேக்கம் விநியோகத்தை முறைப்படுத்தும். அத்துடன், குடிநீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால் இடைக்காலச் சேமிப்பகமாகவும் அது செயல்படும்.
இதன் தொடர்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது. அதில் அந்த ஆய்வுக்கான ஆலோசகர் தேவை எனக் கோரப்பட்டிருந்தது.
புதிய நீர்த்தேக்கத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு இடங்களுமே மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை வனப்பகுதிக்கு வெளியே அமைந்துள்ளதாகக் கழகம் குறிப்பிட்டது.
முதல் இடமானது, சிங்கப்பூர் ஆயுதப்படையின் லோரோங் அஸ்ரமா பயிற்சிப் பகுதிக்குள் அமைந்துள்ளது. அது, இயற்கை வனப்பகுதி எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 1.3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இரண்டாவது இடம், மண்டாய் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சிப் பகுதிக்கு மேற்கே, இயற்கை வனப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
புதிய நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு குறைந்தபட்சம் 60 மில்லியன் இம்பீரியல் கேலன்களாக இருக்கவேண்டும் என்று ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ஏறத்தாழ 109 ஒலிம்பிக் போட்டி நீச்சல் குளங்களுக்கு நிகரானது.
மண்டாய் சாலையில் இருந்து லென்டோர் அவென்யூவரை கிட்டத்தட்ட 8 கி.மீ. நீளத்திற்குக் கூடுதலாகக் குழாய் பதிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
கட்டமைப்புத் தெரிவுகள்
புதிய நீர்த்தேக்கத்தின் கட்டுமான வடிவமைப்பு குறித்து மூன்று தெரிவுகள் ஆராயப்படும். குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு சேவையில் இருக்கும் வகையிலான தொட்டிகள் அதில் இடம்பெற வேண்டும்.
முதலிரு தெரிவுகளின்படி, லோரோங் அஸ்ரமா அல்லது மண்டாய் துப்பாக்கிச்சூட்டுப் பயிற்சிப் பகுதிக்கு மேற்கிலுள்ள இடத்தில் தனித்த உள்கட்டமைப்பாக அந்நீர்த்தேக்கம் அமைக்கப்படலாம்.
லோரோங் அஸ்ரமா பகுதியில் நிலத்தடி நீர்த்தேக்கத்தை அமைப்பது மூன்றாவது தெரிவு. அப்படி அமைக்கும்போது, அதனையொட்டிய நிலப்பகுதியில் ராணுவப் பயிற்சியைத் தொடர முடியும். நீர்த்தேக்கத்திற்கு மேலுள்ள நிலப்பரப்பில் மீண்டும் தாவரங்களை வளர்க்கலாம்.
இம்மூன்று தெரிவுகளிலும் மிகப் பரந்த அளவில் நிலத்தைத் தோண்ட வேண்டியிருக்கும் என்று கழகம் குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் நீர் சேமிப்பு, விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டியது முக்கியம் என ஒப்புக்கொண்டார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆசிய சுற்றுச்சூழல் கழகத்தின் தாவரவியல் வல்லுநர் டாக்டர் ஷான் லாம்.
அதே வேளையில், இயற்கையைப் பாதுகாப்பதிலும் எதிர்கால நீர்த்தேவைகளைச் சமாளிப்பதிலும் ஒரு சமநிலை பேணப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

