பிரதமர் லீ சியன் லூங் அதிகாரபூர்வப் பயணமாக இன்று ஜெர்மனி செல்கிறார்.
ஜெர்மனியின் வடக்குத் துறைமுக நகரான கியலில் அந்நாட்டுப் பிரதமர் ஒலாஃப் ஷொல்சைப் பிரதமர் லீ சந்தித்துப் பேசுகிறார்.
அங்கு சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையின் 'இம்பெக்கபிள்', 'இல்லஸ்ட்ரியஸ்' எனும் இரு நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாட்டையும் அவர் தொடங்கிவைப்பார். அந்நிகழ்ச்சியில் திரு ஷொல்சும் கலந்துகொள்வார்.
பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமரின் துணைவியார், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகம், கடற்படை, தற்காப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோரும் பிரதமருடன் ஜெர்மனி செல்கின்றனர்.
ஜெர்மானியப் பிரதமர் ஷொல்ஸ் கடந்த மாதம் சிங்கப்பூர் வந்திருந்தார். அப்போது, புதுப்பிக்கப்பட்ட வரைவுத்திட்டத்தின்மூலம் இருதரப்புப் பங்காளித்துவத்தை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை அதிகரிக்க இருநாடுகளும் இணக்கம் தெரிவித்தன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், ஜெர்மனியே சிங்கப்பூரின் ஆகப் பெரிய வணிகப் பங்காளியாக விளங்குகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில், இருதரப்பு வணிகம் $23.4 பில்லியனாக இருந்தது. இது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிங்கப்பூரின் வணிகத்தில் கிட்டத்தட்ட 23%.
ஆசியான்-ஐரோப்பிய ஒன்றியம் உச்சநிலை மாநாடு
ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டபின், நாளை மறுநாள் புதன்கிழமை பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் நடக்கும் ஆசியான் - ஐரோப்பிய ஒன்றியம் நினைவு உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ கலந்துகொள்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிஷெலும் கம்போடியப் பிரதமர் ஹுன் சென்னும் அம்மாநாட்டிற்குத் தலைமை வகிப்பர்.
மாநாட்டின் முடிவில் இருவட்டாரத் தலைவர்களும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு வட்டார அமைப்புகளின் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் முதன்முறையாகப் பங்கேற்கும் உச்சநிலை மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுமுதல் வெள்ளிக்கிழமைவரை பிரதமர் லீ வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில், துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார்.

