நீந்திக் களிப்பதற்காக கடலுக்குச் சென்ற நண்பர்கள் நால்வரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவம் லங்காவியின் பந்தாங் செனாயில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது.
மாண்ட இருவரும் சகோதரர்கள் எனக் கூறப்பட்டது. ஆர் யுவராஜ், 22, ஆர் ரவிசங்கர், 26, இருவரும் புக்கிட் மெர்த்தாஜாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷரிமான் அஷாரி தெரிவித்தார்.
விடுமுறையைக் கழிப்பதற்காக 24 மற்றும் 25 வயதுடைய இரு நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று சகோதரர்கள் இருவரும் லங்காவி சென்றனர்.
இரவு 7 மணியளவில் நீந்துவதற்காக அவர்கள் கடற்கரைப் பகுதிக்குச் சென்றனர்.
சகோதரர்கள் இருவரும் 25 வயது நண்பருடன் நீந்துவதற்காகக் கடலில் இறங்கினர். இன்னொரு நண்பர் கரையிலேயே இருந்துவிட்டார்.
அப்போது எழும்பிய பேரலை ஒன்று, அம்மூவரையும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றதாகக் கூறப்பட்டது. பீதியடைந்த மூவரும் உதவி கேட்டு குரல் எழுப்பினர்.
நண்பர் மட்டும் எப்படியோ நீந்திக் கரையேறிவிட்டார். கடற்கரைப் பகுதியில் பணியில் இருந்த மலேசிய குடிமைத் தற்காப்புப் படையினர் அவருக்கு உதவினர்.
ஆயினும், சகோதரர்கள் இருவரும் கரைதிரும்பவில்லை.
யுவராஜின் உடல் இரவு 9.30 மணிக்கும் ரவிசங்கரின் உடல் நள்ளிரவு 12.40 மணிக்கும் மீட்கப்பட்டது. இருவரது உடல்களும் சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

