தெங்கா கட்டுமானத் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம்: 45 வயது ஆடவர் கைது

தெங்கா கட்டுமானத் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் மரணம்: 45 வயது ஆடவர் கைது

2 mins read
f2d81293-fd74-438c-8257-dfec6d12f27e
படம்: அன்ஸ்பிளேஷ் -

தெங்காவில் உள்ள கட்டுமானத் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிர் இழந்ததை அடுத்து, அலட்சிய செயலால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக 45 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழியர் இரும்புக் கம்பிகளை கீழே இறக்கிவைத்தபோது பாரந்தூக்கியின் இரும்புக் கை அவர் மீது விழுந்தது.

இவ்வாண்டு வேலை தொடர்பாக ஏற்பட்டுள்ள 44வது மரணம் இது.

சென்ற 2017க்குப் பின்னர் 42 பேர் வேலையிடங்களில் உயிர் இழந்தனர்.

அதற்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஆக அதிக எண்ணிக்கை இதுவாகும்.

தெங்கா கார்டன்ஸ் அவென்யூவில் எக்சகியூட்டிவ் கண்டோமினியம் வீடுகளின் கட்டுமானத் தளத்தில் அச்சம்பவம் நடந்தது. டோரஸ் பிராப்பர்டிஸ் எஸ்ஜி அந்த வீடுகளைக் கட்டி வருகிறது.

சம்பவம் பற்றி தங்களுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 4.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.

மனிதவள அமைச்சுக்கு சுமார் 20 நிமிடங்கள் கழித்து தகவல் சொல்லப்பட்டது.

மாண்ட ஊழியர் 32 வயது இந்திய குடிமகன் ஆவார். அவரும் சக ஊழியரும் லாரியில் இருந்த பாரந்தூக்கியிலிருந்து இரும்புக் கம்பிகளை கீழே இறக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாரந்தூக்கியின் கை ஊழியரின்மீது விழுந்தது. அதன்கீழ், லாரியில் அவர் சிக்கிக் கொண்டார்.

ஊழியர் மாண்டுவிட்டதாக சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் தொடர்பில் 45 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவருக்கும் உயிரிழந்த ஊழியருக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை.

விபத்து பற்றிய விசாரணை தொடர்கிறது.