தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக நேற்று உதயநிதி ஸ்டாலின், 45, பதவி ஏற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தத் துறை இதற்கு முன்னர் அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதல் பொறுப்பாக இருந்தது.
பதவி ஏற்பு விழா காலை 9.30 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கடந்த வாரம் முதலே ஊகச் செய்திகள் வலம் வந்தன. அது நேற்று நடந்தேறியது.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி. பின்னர் அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்றார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள் வரவேற்று அமைச்சர் இருக்கையில் அமர வைத்தனர்.
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் முதல்முறை சில கோப்புகளில் கையெழுத்திட்டார். விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை 3,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான கோப்பும் அதில் அடங்கும். பின்னர் துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிவேதிதா நாயருக்கு ரூ.4 லட்சம் காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அமைச்சர் பொறுப்பேற்ற அவருக்குப் பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் வந்தன. குறிப்பாக, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து போன்றோர் வாழ்த்தினர்.
அமைச்சராகப் பொறுப்பேற்றுவிட்டதால் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நேற்று உதயநிதி தெரிவித்தார். கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் 'மாமன்னன்' திரைப்படமே தமது இறுதிப் படம் என்றும் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
உதயநிதிக்கு வாழ்த்துகள் ஒருபக்கம் குவிந்தாலும் விமர்சனங்களும் வந்தன.
குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்படி பழனிசாமி தெரிவிக்கையில், "உதயநிதி அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா? ஊழலுக்கு எல்லாம் தலைவராகத்தான் அவர் செயல்படுவார்," என்றார்.
"உதயநிதி அமைச்சராவது தவறு இல்லை. ஆனால், அவரை அமைச்சராக்குவதில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்," என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வியந்தார்.
வளர்வது உதயசூரியனா உதய நிதியா என கேள்வி எழுப்பி, 'Sunrise vs Sonrise' என்றும் 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அரசியல் வாரிசுக்குப் பதவி தரப்பட்டு இருப்பதாகவும் சமூக ஊடகக் கிண்டல்கள் வெளியாயின.
ஆனால், தமிழக அமைச்சர் பொன்முடி குறிப்பிடுகையில், "உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது என திமுகவைச் சேர்ந்த யாரும் கூறவில்லை. கூடிய விரைவில் துணை முதல்
வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதை நானும் எதிர்பார்க்
கிறேன்," என்று கூறினார்.

