தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-ஐரோப்பிய ஒன்றியம் மின்னிலக்கத் துறை உடன்பாடு

2 mins read

சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் ஒரு புதிய உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. இதன் விளைவாக அந்த இரு தரப்புகளுக்கும் இடையில் மின்னிலக்கத் துறையில் உறவும் ஒத்துழைப்பும் விரிவடையும்.

கணினித் தகவல்களைப் பாதுகாப்பாக மாற்றிக்கொள்வது, மின்னிலக்கத் தீர்வுகளை உருவாக்கி பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பை மீள்திறன்மிக்கதாக ஆக்குவது ஆகியவை போன்ற அம்சங்களில் இந்த இரண்டு தரப்புகளும் சேர்ந்து செயல்பட உடன்பாடு வழி செய்யும்.

பிரதமர் லீ சியன் லூங், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லியென் இருவரும் சிங்கப்பூர்-ஐரோப்பிய ஒன்றிய மின்னிலக்க பங்காளித்துவ உடன்பாடு பற்றி அறிவித்தனர்.

இருதரப்பு பொருளியல்களின் எதிர்காலத்தை வளமிக்கதாக ஆக்கக்கூடிய அளவுக்கு புதிய உடன்பாடு ஆற்றல்மிக்கது என்று இருவரும் தெரிவித்தனர்.

அதோடு மட்டுமன்றி, வர்த்தகம், ஆய்வு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு தரப்பு களுக்கும் இடையில் நிலவும் நீண்டகால ஒத்துழைப்பை அந்த உடன்பாடு மேலும் பலப்படுத்தும் என்று இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்கள்.

"மாற்றங்களும் குழப்பங்களும் நிலவக்கூடிய ஒரு சூழ்நிலையில் சிங்கப்பூரும் ஐரோப்பிய ஒன்றியமும் மேலும் ஒரு பெரும் முயற்சியை எடுத்து இருக்கின்றன.

"குடிமக்கள், பயனீட்டாளர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் நலனை மனதில்கொண்டு இரு தரப்புகளும் உத்திபூர்வ பங்காளித்துவ உறவை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றன," என்று கூட்டறிக்கை தெரிவித்தது.

மின்னிலக்கப் பொருளியலைத் திறந்துவிடுவதற்கான கூட்டுக் கடப்பாட்டை பிரதிபலிக்கும் மின்னிலக்க வர்த்தக கோட்பாட்டுத் தொகுப்பு ஒன்றின் பேரி லும் இரு தரப்புகளும் இணக்கம் கண்டு இருக்கின்றன.

இந்த இணக்கம், பொதுவான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் மட்டுமன்றி உலகத்தோடும் கூடிய மின்னிலக்க வர்த்தகத்தை அதிகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோட்பாடுகளைப் பலப்படுத்தி இரு தரப்பு மின்னிலக்க வர்த்தக விதிமுறைகளை அமல்படுத்துவது தங்கள் இலக்கு என்றும் தலைவர்கள் அறிக்கையில் கூறினர்.

பிரசல்ஸ் நகரில் ஆசியான்-ஐரோப்பிய ஒன்றிய நினைவு உச்சநிலை மாநாடு நடக்கிறது. அதையொட்டி பிரதமர் லீயும் ஆணையத் தலைவரும் சந்தித்தனர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இரு தலைவர்களும் உக்ரேன் நிலவரம் பற்றி விவாதித்தனர்.

தாராள வர்த்தகம், பலதரப்பு ஏற்பாடு, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்குமுறை ஆகிய வற்றில் பொதுவான அக்கறை நிலவுவதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டியதாக பிரதமர் லீயின் செய்தித்துறை செயலாளர் சாங் லி லின் குறிப்பிட்டார்.

பிரதமர் லீ பிரசல்ஸ் நகரில் பல தலைவர்களையும் சந்தித்து இரு தரப்புக் கூட்டங்களை நடத்தினார்.

கிரேக்க பிரதமர், செக் குடியரசு பிரதமர், லித்துவேனிய அதிபர் ஆகியோரை முன்னதாக திரு லீ புதன்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஆஸ்திரிய மத்திய நிதிஅமைச்சர் கார்ல் நெஹாமரையும் திரு லீ சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட நீண்டகால, மனமுவந்த நல்லுறவை இருவரும் மறுஉறுதிப்படுத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பொருளியல் ஈடுபாட்டை விரிவுபடுத்தவும் வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் சுட்டினர்.