மலேசியாவில் நிகழ்ந்த விபத்தில் ஒரு சிறுவன், ஆறு பெண்கள் உட்பட 21 பேர் மரணம்
மலேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஜெண்டிங் ஹைலண்ட் அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் பலர் உயிரோடு புதையுண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரைக் காணவில்லை என்று நேற்று மதியம் மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் கோலாலம்பூரின் புறநகப் பகுதி யில் பத்தாங் காலியில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த பல முகாம்கள் நிலச்சரிவில் புதை யுண்டன. இதில் 25 பேர் வரை புதையுண்டதாக உலு சிலாங்கூர் காவல்துறை தலைவர் சுஃபியன் அப்துல்லா நேற்று மதியம் தெரிவித்தார்.
அவர்களை மீட்கும் பணியில் 15 அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த 394 பேர் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
நேற்று மதியம் வரை 61 பேரை அதிகாரிகள் மீட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இறந்தவர்களில் ஒரு சிறுவனும் ஆறு பெண்களும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபா தெரிவித்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் 79 பேர் முதல் 100 பேர் வரை தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
வியாழன் அதிகாலை 2.15 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக உயிர்பிழைத்த சிலர் கூறினர்.
முகாம் ஒன்றில் குடும்பத்தோடு தங்கியிருந்த 37 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசியான டீ இயோவ் கிங், இதுவரை தமது வாழ்க்கையில் கேட்டிராத பெரும் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாகத் தெரிவித்தார்.
விடியற்காலை 2.00 மணி அளவில் அவர் உறங்கச் சென்றார். அப்போது பெரும் சத்தம் கேட்டதாகவும் மனைவி, பிள்ளைகளுடன் வெளியே ஓடுவதற்குக்கூட நேரமில்லாமல் முகாமிலேயே பதுங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
"நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்," என்றார் அவர்.
சிலாங்கூரில் உள்ள உலு யாம் பாரு காவல் நிலையத்திலிருந்து அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்தார். திரு டீ, அவரது மனைவி, இரண்டு பிள்ளைகளான ஏழு வயது மகன், மூன்று வயது மகள் ஆகிய நால் வரும் காயமின்றி உயிர்தப்பினர். திரு டீயும் அவரது நண்பர்களும் விடுமுறையைக் கழிப்பதற்காக அங்கு சென்றனர்.
டார்ச் விளக்கு உதவியுடன் பாதியளவு புதைந்திருந்த குழந்தையின் குடும்பத்துக்கு அவர்கள் உதவி செய்தனர். 3.00 மணியளவில் திரு டீ உட்பட உயிர் பிழைத்த அனை வரும் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப் பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், நிலச்சரிவினால் தாம் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகத் தெரிவித்தார்.
நிலச்சரிவில் காணாமல் போனவர்களை உடனடியாக தேடி மீட்கும்படி அவர் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
"மலேசியர்களே, தேடி மீட்புப் பணிகள் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்," என்று திரு அன்வார் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே முகாம்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
"உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில் காய்கறிகளைப் பயிரிடும் பண்ணை என்றே நடத்துநர்கள் உரிமம் பெற்று இருந்தனர்," என்று உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சரான ஙா கோர் மிங் தெரிவித்தார்.
நீர்வீழ்ச்சி, ஆறு, மலைப்பகுதி போன்ற இடங்களில் உள்ள அனைத்து முகாம்களையும் அகற்ற உத்தரவிட்டுள்ளேன் என்று கூறிய அவர், இதனை மீறுவோருக்கு 50,000 ரிங்கிட் வரை அபராதமும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
அங்கு வந்த உள்துறை அமைச்சர் சைஃபூதீன் நாசுஷன் இஸ்மாயில், அடுத்த உத்தரவு வரை அனைத்து முகாம் நடவடிக்கைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

