மலேசியாவில் முகாமிடம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போயுள்ள ஒன்பது பேரை தேடும் பணி மூன்றாவது நாளாக நேற்று நீடித்தது.
அவர்களை மீட்க இயன்றவரை அனைத்து முயற்சிகளையும் மலேசிய அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். மண்ணில் புதையுண்டு இருக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கக்கூடிய ரேடார் சாதனங்களும் பயன்படுத்தப்படுவதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறைத் தலைவர் நெராஸாம் காமிஸ் நேற்று தெரிவித்தார்.
''இன்னமும் காணாமல் போய் இருப்பவர்களை மீட்க அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறோம். சம்பவம் நிகழ்ந்த இடம் மேடு பள்ளமாக இருப்பதால் ரேடார் சாதனத்தைப் பணியில் இறக்குவது சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த முயற்சியில் அது தேவைப்படுகிறது,'' என்று அவர் கூறினார்.
தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் இருக்கும் பிரபலமான உல்லாச பொழுதுபோக்கு குன்று அமைந்துள்ள பாத்தாங் காலியில் முகாம்களில் வெள்ளிக்கிழமை பல ரும் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென நிலம் சரிந்துவிட்டது.
அந்தப் பயங்கர சம்பவத்தில் 94 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் இளம் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினர், தொடக்கப்பள்ளி ஒன்றைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரும் உள்ளடங்குவர் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.
பிறகு 61 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். குறைந்தபட்சம் 24 பேர் மரணமடைந்துவிட்டனர். இன்னமும் ஒன்பது பேரைக் காணவில்லை என சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.
அந்த நிலச்சரிவில் மாண்டவர்களில் ஏழு பேர் சிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மண்ணில் புதைந்து இருப்போரை மீட்கும் பணியில் ஒன்பது தீயணைப்பு, தேடி மீட்புத் துறையின் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. எட்டு நிலம் தோண்டும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர், ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பல்வேறு துறைகளையும் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அதேவேளையில், இனிமேல் யாரையும் உயிரோடு மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
இதனிடையே, நிலச்சரிவில் மண்ணில் புதைந்தவர்களால் மூச்சுவிட முடியாது. அதோடு மட்டுமல்லாமல் மண்ணின் எடை காரணமாக அவர்கள் கீழ்நோக்கி அழுத்தப்படுவார்கள் என்று திரு நெராஸாம் காமிஸ் விளக்கினார்.
ஜென்டிங் ஹைலண்ட் அருகே நிகழ்ந்த அந்த நிலச்சரிவில் ஏறக்குறைய 450,000 கன மீட்டர் மண் சரிந்து இருப்பதாக முதற்கட்ட புலன்விசாரணை மூலம் தெரியவந்து இருக்கிறது.
அந்த நிலம், 30 மீட்டர் உயரத்தில் இருந்து சரிந்து சுமார் 0.4 ஹெக்டர் பரப்பளவுள்ள இடத்தை அப்படியே மூடிவிட்டது என்றும் மதிப்பிடப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்த முகாம் இடத்தை நிர்வகித்து நடத்தும் நிர்வாக அதிகாரி, நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் ஆகியோரிடம் இருந்து காவல்துறை வாக்குமூலங்களைப் பெற்று இருக்கிறது.

