ஜூரோங் புத்தாக்க மாவட்டம் என்ற 600 ஹெக்டர் பரப்பளவுள்ள அதிநவீன உற்பத்தித் துறை வட்டாரத்தை அமைப்பதற்கான திட்டங்கள் உருவாகி வருகின்றன.
சுவா சூ காங் அளவிற்குப் பரப்புள்ள அந்த மாவட்டத்தில் பல்வேறு மேம்பாடுகள் இடம்பெறுகின்றன. ஜூரோங் சுற்றுச்சூழல் தோட்டமும் அவற்றில் ஒன்று.
ஜூரோங் வெஸ்ட் மக்கள் அந்தத் தோட்டத்திற்கு வசதியாகச் சென்றுவர புதிய மேம்பாலம் ஒன்றும் அமையவிருக்கிறது.
அந்த 110 மீட்டர் நீள பாலம் தீவு விரைவுச்சாலைக்கு குறுக்கே அமையும். 2024ல் அது தயாராகி விடும். இதற்கான திட்டங்களை ஜூரோங் நகராண்மைக் கழகம் வகுத்து வருகிறது.
புதிதாக அமையவிருக்கும் ஜூரோங் புத்தாக்க மாவட்டம் எதிர்காலத் தொழிற்பேட்டை என்று வர்ணிக்கப்படுகிறது.
அது ஐந்து வட்டாரங்களைக் கொண்டு இருக்கும். முன்னாள் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் 2016 வரவுசெலவுத் திட்டத்தின்போது இது பற்றி அறிவித்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், 60 ஹெக்டர் பரப்பளவில் உருவாகி வரும் 'கிளீன் டெக் பேட்டை' ஆகியவையும் அந்த மாவட்டத்தில் அமைந்து இருக்கும். 5 ஹெக்டர் பரப்பளவிலான சுற்றுச்சூழல் தோட்டமும் அங்கு உள்ளது.
இப்போது பூலிம் என்ற மூன்றாவது வட்டாரம் உருவாக்கப்பட்டு வருகிறது. பஹார், தெங்கா என்ற இதர இரண்டு வட்டாரங்கள் வருங்காலத்தில் உருவாக்கப்படும்.
இதனிடையே, இந்தத் திட்டங்கள் பற்றி கருத்துக் கூறிய ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் புதிய குடியிருப்புப் பேட்டைகள் பிரிவு 1 இயக்குநர் திருவாட்டி ஃபின் டே, ''2014ல் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட ஜூரோங் சுற்றுச்சூழல் தோட்டம் 2023 முதல் 2024 வரை புதுப்பிக்கப்படும்.
''புதுப்பிக்கப்பட்ட பிறகு அந்தத் தோட்டத்தில் புதிய விளையாட்டுத் திடல், உடலுறுதி முகப்பு, மேம்படுத்தப்பட்ட நடைபாதைகள் எல்லாம் இருக்கும்,'' என்று திருவாட்டி டே கூறினார்.
அந்தத் தோட்டத்திற்குப் போய் வருவது இப்போது சிரமமாக இருக்கிறது என்று குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கவலையைப் போக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும் என்றார்.
பூலிம் சதுக்கம் 2024ல் தயாராகிவிடும். அங்கு நிறுவனங்கள் அமைந்து இருக்கும். குடியிருப்பாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பல்வேறு வசதிகள் இருக்கும் என்றாரவர்.
ஜூரோங் நகராண்மைக் கழக தொழிற்பேட்டை 1ல் முதல்முறையாக இரண்டு வகை உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவை 2024 முதல் கட்டம் கட்டமாக நிறைவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜூரோங் புத்தாக்க மாவட்டத்தின் ஐந்து வட்டாரங்களையும் இணைக்கும் 11 கி.மீ. ஆகாயப் பாதை வழி மக்கள் நடந்து செல்லலாம், சைக்கிளோட்டிச் செல்லலாம், தானியக்க வாகனத்தில்கூட பயணிக்கலாம்.
அதோடு, 'மாவட்டத் தளவாடப் போக்குவரத்துக் கட்டமைப்பு' என்ற கனரக வாகனங்களுக்கான சுரங்கவழிக் கட்டமைப்பு ஒன்று 2024ல் தயாராகிவிடும். இது எதிர்காலத்தில் தானியக்க சரக்கு வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும்.

