'50 வயதானவர்களுக்கும் பிரம்படி விதிக்க வேண்டும்'

'50 வயதானவர்களுக்கும் பிரம்படி விதிக்க வேண்டும்'

2 mins read

பாலி­யல் பலாத்காரக் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் 50 வயதுக்கு மேற்­பட்­டோரை பிரம்­படி தண்­ட­னை­யில்­இருந்து விலக்கு அளிக்­கும் சட்­டத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

நேற்று வெளி­யிட்ட தனது ஃபேஸ்புக் பதி­வில் குழந்­தை­கள் தொடர்­பான அண்­மைய பாலி­யல் குற்­றச்­செ­யல்­கள் மன­தைப் பாதிப் ­ப­தாக தெரி­வித்­தார்.

சொந்த வீட்­டி­லேயே உற­வி­னர்­க­ளால் குழந்­தை­கள் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு ஆளா­வதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

சட்­டப்­படி ஐம்­பது வயது மேற்­பட்­ட­வர் களுக்கு பிரம்­படி தண்­ட­னை­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது. ஆனால் பாலி­யல் பலாத்காரத்தில் ஈடு­பட்­ட­வர்­கள், ஐம்­பது வய­தைத் தாண்­டி­விட்­டார்­கள் என்­ப­தற்­காக பிரம்­ப­டி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கக்­கூ­டாது என்று அவர் கூறினார்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வாழ்­நாள் முழு­வ­தும் கடும் அதிர்ச்­சி­யைத் தரக்­கூ­டிய கொடூ­ர­மான பாதிப்பை அவர்­கள் ஏற்­படுத்­தி­யி­ருக்­கின்­ற­னர். சில சம்­ப­வங்­களில் முன்பு செய்த பாலி­யல் வன்­பு­ணர்­வுக் குற்­றச்­செ­யல்­கள் அந்­தக் குற்­றத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு ஐம்­பது வயது ஆனபிறகே தெரிய வரு­கிறது.

"இந்­தச் சட்­டத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது," என்றார் அவர்.

"பாலி­யல் செயல்­க­ளுக்கு குறிவைக்­கும் நபர்­க­ளி­ட­மி­ருந்து குழந்­தை­கள் காப்­பாற்­றப்­பட வேண்­டும்.

"குற்­ற­வா­ளிகளுக்கு கடு­மை­யா­ன தண்­டனை விதிப்பது அவசியம். குழந்­தை­களைப் பாலியல் பலாத்காரத்திலிருந்து பாது­காக்க அதிக வழி­கள் கண்­ட­றியப்பட வேண்­டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது­போன்ற பல குற்­றச்­செ­யல்­கள் புகார் ­அளிக்­கப்படாமல் இருந்­தி­ருக்­க­லாம் என்று கவலை தெரி­வித்த அவர், பாதிக்­கப்­பட்ட இளம் குழந்தைக­ளின் வேத­னை­யை­யும் பாதிப்­பை­யும் கற்­பனை செய்­து­கூட பார்க்க முடி­ய­வில்லை என்று கூறினார்.

இது­வரை புகா­ர­ளிக்­கப்­பட்ட சம்­ப­வங்­களில் சில ஒற்­று­மை­கள் இருப்­ப­தாகவும் அவர் தெரி வித்தார்.

"பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இளம் வய­தி­லி­ருந்தே பாலி­யல் வன்­முறை நோக்­கம் கொண்­ட­வர்களால் வளர்க்­கப்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் தந்­தை­யா­கவோ, வளர்ப்­புத் தந்­தை­யா­கவோ அல்­லது ஆண் உற­வி­ன­ரா­கவோ இருக்­கின்­ற­னர். இதனால் இளம் வய­தி­ன­ருக்கு எதி­ரான தங்­க­ளு­டைய குற்­றச்­செ­யல் சாதா­ர­ண­மா­னது என்று அவர்­கள் கரு­து­கின்­ற­னர்.

"பாதிக்­கப்­பட்ட பலர் இத்­த­கைய செயல்­கள் தவறு என்­பதை பள்­ளி­யில் பாலி­யல் கல்­விக்­குப் பிறகே உணர்ந்­து­கொள்­கின்­ற­னர்.

"இளம் வய­தி­ன­ரின் அப்­பா­வித்­த­னத்­தைப் பயன்­ப­டுத்தி இதெல்­லாம் தவறான செயல் அல்ல என்று கூறி தங்­க­ளு­டைய இச்­சைக்கு அவர்­களை பாலி­யல் வன்­கொ­டு­மைக்­கா­ரர்­கள் பணிய வைக்­கின்­ற­னர். சில சம்­ப­வங்­களில் குடும்­பம் உடைந்­து­வி­டுமோ அல்­லது வீட்­டுக்கு சம்­பா­திப்­ப­வரை இழந்­து­வி­டுமோ என்று அஞ்சி பாதிக்­கப்­பட்ட சிலர் புகார் அளிப்­பது இல்லை. சில வேளை­களில் மிரட்­டலுக்­காக பாதிக்­கப்பட்­ட­வர்­கள் மௌன­மாகி விடு­கின்­ற­னர்," என்று அவர் தெரி­வித்­தார்.

'பேவ்' போன்ற சமூக சேவை அமைப்­பு­கள், அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து குழந்தைகளைப் பாது­காக்­கும் வழி­க­ளைக் கண்­ட­றியலாம் என்று யோசனை வழங்­கிய அதி­பர் ஹலிமா, "குழந்­தை­க­ளைப் பாது­காப்­பது நமது கடமை, அதில் தோல்­வி­ய­டைந்து விடக்கூடாது," என்­று குறிப்பிட்டார்.

பாலியல் பலாத்கார குற்றச்செயல் தொடர்பான சட்டத்தைத் திருத்த அதிபர் வேண்டுகோள்