தாய்லாந்து கடற்படைக்குச் சொந்த மான போர்க்கப்பல் ஒன்று பலத்த காற்று மற்றும் அலையில் சிக்கி மூழ்கியதில் 31 மாலுமிகள் காணவில்லை.
ஞாயிறு இரவு 'எச்டிஎம்எஸ் சுகோதாய்' எனும் போர்க்கப்பலி லிருந்து 73 மாலுமிகள் மீட்கப்பட்டனர். எஞ்சிய 33 பேருடன் கப்பலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தாய்லாந்து கடற்படை தெரிவித்தது.
பலத்த காற்றில் ஒரு பக்கமாக சாய்ந்த போர்க்கப்பலில் தண்ணீர் புகுந்தது என்று கடற்படை பேச்சாளர் போக்ரோங் மோன்தாட்பாலின் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
குழாய் வழியாக கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மாலுமிகள் கப்பலின் கட்டுப்பாட்டை இழந்தனர். கப்பலின் மேற்பரப்பிலும் கடல்நீர் மளமளவென புகுந்ததும் அது மூழ்கத் தொடங்கியது என்றார் அவர்.
அந்த சமயத்தில் 'எச்டிஎம்எஸ்' போர்க்கப்பல், மத்திய தாய்லாந்தின் பங் சப்ஹான் மாவட்டத்திலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சுற்றுக்காவல் மேற்கொண்டது.
தாய்லாந்து வளைகுடாவில் சூறாவளி எதிர்பார்க்கப்பட்டது. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் எச்சரித்தது. படகுச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் போர்க்கப்பல் மூழ்கத் தொடங்கியதும் கடற்படைக் கப்பல்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் அனுப்பி ராணுவம் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டது.
கப்பலிலிருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஆரம்பத்தில் கடற்படை கூறியது.
பின்னர் வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவில் இன்னும் 33 பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது என்று அது தெரிவித்தது.
கப்பலைச் சுற்றி இருட்டில் பாதுகாப்புக் கவசம் அணிந்த ஊழியர்களுடன் சிறிய படகுகளில் மாலுமிகள் ஏற்றிச் செல்லப்படுவதை சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் காட்டின. ஆனால் எத்தனை படகுகள் பயன் படுத்தப்பட்டன என்பது குறித்து தகவல் இல்லை.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சுகோதாய் போர்க்கப்பல் 1987ஆம் ஆண்டிலிருந்து தாய் லாந்து கடற்படையில் சேவையாற்றி வந்தது.

