கொவிட்-19 பரவலின்போது உடல் அசைவு குறைந்தது சிங்கப்பூரர்களின் சுகாதார நிலை குறித்த தேசிய சுகாதார ஆய்வறிக்கை

கொவிட்-19 பரவலின்போது உடல் அசைவு குறைந்தது சிங்கப்பூரர்களின் சுகாதார நிலை குறித்த தேசிய சுகாதார ஆய்வறிக்கை

3 mins read

கொவிட்-19 பெருந்­தொற்று சிங்­கப்­பூ­ரர்­க­ளின் சுகா­தா­ரத்­தைக் கணி­ச­மா­கப் பாதித்­துள்­ளது. குறை­வா­னோரே உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர். நாள்­பட்ட நோய், புற்­று­நோய் பரி­சோ­த­னை­க­ளுக்­குச் செல்­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறைந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது சுகா­தா­ரத்­தைக் கவ­னித்­துக்­கொள்­வ­தற்­கான அவ­சி­யத்தை இது உணர்த்­து­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வை அமைச்சு நேற்று வெளி­யிட்­டது.

கொள்­ளை­நோய் பர­வ­லின்­போது மூத்த குடி­மக்­கள் கொவிட்-19 தடுப்­பூ­சி­யு­டன் சளிக்­காய்ச்­சல், நுரை­யீ­ரல் நோய்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர். நிமோ­கோக்­கல், இன்­ஃபு­ளு­வென்சா எனப்­படும் சளிக்­காய்ச்­சல்­க­ளுக்­கான தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான விகி­தம் அதி­க­ரித்து இருப்­பது நம்­பிக்கை அளிக்­கும் விஷ­ய­மாக உள்­ளது. மேலும், மன­வு­ளைச்­சலை சமா­ளிக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிபு­ணர்­க­ளி­டம் உதவி கோர கூடு­த­லா­னோர் முன்­வந்­த­னர்.

2020 ஜூலைக்­கும் கடந்த ஆண்டு ஜூலைக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் 18 முதல் 74 வய­துக்­குட்­பட்­டோ­ரி­டம் இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது.

சுகா­தா­ரப் பரி­சோ­த­னை­யில் பங்­கேற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை சரிந்­தது. பெருந்­தொற்று கார­ண­மாக பரி­சோ­தனை சேவை உள்­ளிட்ட அவ­ச­ர­மற்ற சேவை­கள் தள்­ளி­வைக்­கப்­பட்­டது இதற்­குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­க­லாம் என்று அமைச்சு கூறி­யது.

குறிப்­பாக, நாள்­பட்ட நோய்­களுக்­கான பரி­சோ­தனை விகி­தம் 2019ல் 66 விழுக்­கா­டாக இருந்­தது. கடந்த ஆண்டு இது 59 விழுக்­கா­டாக சரிந்­தது.

இந்த ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் ஏறக்­கு­றைய 7 விழுக்­காட்­டி­னர், தங்­க­ளுக்கு நீரி­ழிவு இருப்­ப­தா­கத் தெரி­வித்­த­னர். ஏறத்­தாழ 14 விழுக்­காட்­டி­னர் தங்­களுக்கு உயர் ரத்­தக் கொழுப்பு இருப்­ப­தா­க­வும் 16 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளுக்கு உயர் ரத்த அழுத்­தம் இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­த­னர். ஆனால் உண்மை நில­வ­ரத்தை இது பிர­தி­ப­லிக்­கா­மல் இருக்­க­லாம் என்று அமைச்சு கூறி­யது.

"கொவிட்-19 பெருந்­தொற்­றின்­போது குறை­வா­னோரே நாள்­பட்ட பரி­சோ­த­னைக்­குச் சென்­ற­னர். எனவே, நாள்­பட்ட நோய்­கள் பெரிய அள­வில் கண்­ட­றி­யப்­ப­டா­மல் இருக்­க­லாம்," என்று அது சொன்­னது.

எடையை அள­வி­டு­தல், சிறு­நீர், ரத்­தப் பரி­சோ­தனைகளைச் செய்­தா­லொ­ழிய தங்­க­ளுக்கு நாள்­பட்ட நோய்­கள் இருப்­பது பல­ருக்­கும் தெரி­யா­மல் இருக்­க­லாம்.

அடுத்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் 'மேலும் ஆரோக்­கி­ய­மான எஸ்ஜி' எனும் பிர­தான நோய்த் தடுப்­புத் திட்­டத்தை செயல்­ப­டுத்த சிங்­கப்­பூர் தயா­ராகி வரும் வேளை­யில் இந்த முடி­வு­கள் வந்­துள்­ளன.

நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தம், உயர் ரத்­தக் கொழுப்பு, மார்­பகம், கர்ப்­பப்பை, பெருங்­கு­டல் மலக்­கு­டல் புற்­று­நோய்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான பரி­சோ­த­னை­க­ளுக்கு இந்­தத் திட்­டத்­தின் கீழ் முழு­மை­யாக நிதி வழங்­கப்­படும்.

இந்த ஆய்­வில் தெரி­ய­வந்­துள்ள கவ­லைக்­கு­ரிய மற்­றோர் அம்­சம், பரிந்­து­ரைக்­கப்­பட்ட வாரத்­திற்கு குறைந்­தது 150 நிமி­டங்­கள் மித­மான முதல் தீவிர உடல் செயல்­பாட்டை குறை­வா­னர்களே மேற்­கொண்­டுள்­ள­னர், குறிப்­பாக மூப்­ப­டை­யும் மக்­கள்.

கிட்­டத்­தட்ட 80 விழுக்­காட்­டி­லி­ருந்து 2021ல் இது 71 விழுக்­காட்­டா­கக் குறைந்­தது. குறிப்­பாக, 2021ஆம் ஆண்­டில் தொடர்ச்­சி­யான உடற்­ப­யிற்சி 60 முதல் 74 வயது வரை­யுள்ள வய­தான பெரி­ய­வர்­க­ளி­டையே மிகக் குறை­வா­க­வும் (24 விழுக்­காடு), 18 முதல் 29 வயது வரை­யுள்ள இளம் வய­தி­ன­ரி­டையே மிக அதி­க­மா­க­வும் (40.5 விழுக்­காடு) இருந்­தது.

மன­ந­லத்­தைப் பொறுத்­த­வரை, மன உளைச்­ச­லைச் சமா­ளிக்க சுகா­தார நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து உத­வியை நாட அதி­க­மா­னோர் குறிப்­பாக இளம் வய­தி­னர் தயா­ராக உள்­ள­னர். 2019ல் 47.8% ஆக இருந்த இந்த எண்­ணிக்கை 2021ல் 58.3% ஆக உயர்ந்­துள்­ளது. இதில் 60 முதல் 74 வரை­யுள்­ளோர் குறைந்த விருப்­ப­முள்­ள­வர்­க­ளா­க­வும் 30 முதல் 39 வரை­யுள்­ளோர் மிக­வும் விருப்­ப­முள்­ள­வர்­க­ளா­க­வும் இருக்­கின்­ற­னர்.

இது மன­ந­லம் குறித்த பொது­மக்­க­ளின் விழிப்­பு­ணர்வை அதி­க­ரிப்­பதை பிர­தி­பலிக்­கிறது. மேலும் மன நிலைமை குறித்த தவ­றான எண்­ணம் குறைந்­தி­ருப்­ப­தை­யும் காட்­டு­கிறது. அதிக சிங்­கப்­பூ­ரர்­கள் தொற்­று­நோய்க்கு பிறகு மன­நல நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து உதவி பெற விரும்­பு­கி­றார்­கள் என்­பதை ஆய்வு காட்­டி­யது.