இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியிட உள்ளதாக இந்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"தற்போது இந்த ரயிலின் வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இந்தப் பணிகள் நிறைவுற்று ரயில் சேவைக்குத் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது," என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
'வந்தே மெட்ரோ' என அழைக்கப்படும் இந்த ரயில்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். இந்த ரயில்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில்களைக் காட்டிலும் மாறுபட்ட பயண அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை.
குறிப்பாக, தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1950, 1960ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக இது அமையும் என்று அவர் கூறினார்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரயில்கள் டீசலில் அல்லது மின்சாரத்தில் இயங்குகின்றன.
வந்தே மெட்ரோ ரயில் உலகத் தரம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டு வருகின்றது.
ஆகையால், ஹைட்ரஜன் ரயில் வருகை மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது 1950, 60களில் தயாரிக்கப்பட்ட ரயில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கும் வகையில் இந்த ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இதன் கட்டணமும் மிகக் குறைவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திய பொறியாளர்களே இந்த ரயிலை வடிவமைத்து வருகின்றனர். வந்தே பாரத் 3 ரக ரயிலையும் அரசாங்கம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் எரிசக்தி நிறுவனங்களும் கரிம வெளியீட்டைக் குறைக்கும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் சுத்தமான ஹைட்ரஜன் மீது அக்கறை செலுத்தி வருகின்றன. எனினும் அதன் எதிர்கால பயன்பாடும் செலவும் நிச்சயமற்றதாகவே உள்ளன.

