தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், உலகத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் துணை இயக்குநர் நீதி மன்றத்தில் முன்னிலையாகி, விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதில், தமிழ் மொழியை வளர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். சங்க காலத் தமிழ் இலக்கியங்களையும், நவீன காலத் தமிழ் இலக்கியங்களையும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

