பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு மையத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகளில் 25 பேரை அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்; பத்துப் பேர் காயமுற்றனர். சண்டையில் பயங்கரவாதிகளால் பிணை பிடிக்கப்பட்ட பாதுகாவல் அதிகாரி ஒருவரும் மாண்டுபோனார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள பன்னு நகரில் இருக்கும் அம்மையத்திற்குள் 35 பயங்கரவாதிகள் புகுந்தனர். தங்களைத் தடுத்தவர்களை அடக்கியதோடு, அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் பறித்துக்கொண்டனர்.
இரண்டு நாள் முற்றுகைக்குப்பின் ராணுவப் படையினர் நேற்று முன்தினம் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அப்போது, பயங்கரவாதிகளில் எழுவர் சரணடைந்துவிட்டதாகவும் தப்ப முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டதாகவும் ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் அகமது ஷரிஃப், ஜியோ செய்தித் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
"நிபந்தனை ஏதுமின்றி சரணடையும்படி பயங்கரவாதிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை," என்று திரு ஷரிஃப் விளக்கினார்.
பயங்கரவாதிகள் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல விரும்பினர் என்றும் ஆனாலும் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றும் திரு ஷரிஃப் சொன்னார்.
முன்னதாக, ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டன என்றும் அம்மையத்திற்கு அருகே வெடிச்சத்தம் கேட்டது என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளில் பலரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.
முன்னதாக, கடந்த ஞாயிறன்று பன்னு வட்டாரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் நால்வர் கொல்லப்பட்டனர்.

