புதிய வகை கொரோனா கிருமியால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் சீனாவில் மோசமான நிலைமை தொடர்கிறது. குறிப்பாக, சீனாவின் ஆகப்பெரிய நகரமான ஷாங்காயில் ஏராளமான மக்கள் கொவிட்-19 தொற்றால் அவதிப்படுகின்றனர்.
நகரில் உள்ள மொத்த மக்கள்தொகையான 25 மில்லியன் பேரில் இன்னும் ஒரு வாரத்தில், அதாவது ஆண்டிறுதிக்குள் பாதிக்கும் மேற்பட்டோரை கிருமி தொற்றும் அபாயம் உள்ளது. இதனை ஷாங்காய் டேஜி மருத்துவமனை 'வீசாட்' சமூக ஊடகத்தளத்தின் வாயிலாகத் தெரிவித்து உள்ளது.
ஷாங்காயில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.43 மில்லியன் பேர் என்று மதிப்பிடுவதாகவும் இந்த எண்ணிக்கை இன்னும் ஒருசில நாள்களில் 12.5 மில்லியனைத் தொட்டுவிடும் அபாயம் உள்ளது என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆக மோசமான நிலைமையைச் சமாளிக்கத் தயார்நிலையில் இருக்குமாறு தனது ஊழியர்களை அந்த மருத்துவமனை அறிவுறுத்தி இருக்கிறது.
தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் ஆங்கில, சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் பாதுகாப்பற்றவையாக தான் கருது வதாகவும் புதன்கிழமை பின்னேரத்தில் 'வீசாட்' ஊடகத்தில் அந்த மருத்துவமனை வெளியிட்ட பதிவு குறிப்பிட்டது.
கொவிட்-19 தொற்று அறவே இருக்கக்கூடாது என்னும் கொள்கையைப் பின்பற்றி வந்த சீனா, இந்த மாதம் எழுந்த மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அக்கொள்கையை கைவிட்டது. அதேநேரம் தொற்றுப் பரவல் தணிந்தபாடில்லை.
இருப்பினும், 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 5,241 என சீனா கூறி வருகிறது. இந்த வாரம் செவ்வாய், புதன்கிழமைகளில் ஒரு கொரோனா மரணம்கூட நிகழவில்லை என்றும் சீனா தெரிவித்தது.
ஆனால், தகனச் சாலைகளுக்கான தேவை கடந்த வாரம் அதிகரித்ததாக அவற்றின் ஊழியர்கள் கூறினர். தேவை அதிகரிப்பால் தகனச் சாலைகளுக்கான கட்டணமும் அதிகரித்துவிட்டது.
கொரோனா மரணம் என்று வகைப்படுத்துவதற்கான அளவுகோலை சீனா கீழிறக்கியுள்ளது மரண எண்ணிக்கை அறிவிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ஷாங்காயின் ஆகப்பெரிய பொது மருத்துவமனையான டோங்ரென் மருத்துவமனையின் மருத்துவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளை நடைபாதையில் வைத்து சிகிச்சை அளிப்பதை நேற்று முன்தினம் (புதன்கிழமை) கண்டதாக ஊடகங்கள் கூறின.
கள்ளச்சந்தையில் மருந்துகள்
மருந்துகளுக்கும் சீனாவில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, 'பேக்ஸ்லோவிட்' என்னும் ஃபைசர் நிறுவன கிருமித்தடுப்பு மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. அதேநேரம் சீனாவில் விற்பனைக்கு அனுமதிக்கப்
படாத நோயெதிர்ப்பு மருந்துகளை வாங்க இணையத்தளங்களை பலரும் நாடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சீனாவில் உள்ள தனது நாட்டு மக்களுக்காக ஃபைசர் தடுப்பூசிகளை ஜெர்மனி அனுப்பி வைத்துள்ளது. சீனாவில் கிட்டத்தட்ட 20,000 ஜெர்மானியர்கள் வசிக்கிறார்கள். அதேநேரம் சீன மக்களுக்கு சீனாவின் சொந்தத் தயாரிப்பு தடுப்பூசிகளே பயன்
படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜனவரி முதல் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமை உத்தரவை சீனா நீக்க திட்டமிடுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
சீனா, தனது மூன்றாண்டு கொள்கையைக் கைவிட்டு '0+3' என்னும் புதிய கொள்கை பற்றி பரிசீலித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டுப் பயணிகள் ஹோட்டல்களிலோ தனிமைக்கான வசிப்பிடங்களிலோ தங்கியிருக்க வேண்டும் என்ற உத்தரவை அது முடிவுக்குக் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.

