இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மணமுடிக்க பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இதனை எடுத்துரைக்கும் விதத்தில் குதிரையில் 50 ஆண்கள் மணமகன் வேடமிட்டு ஊர்வலமாகச் சென்றதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூரில் நடைபெற்ற இந்த ஊர்வலத்திற்கு ஜோதி கிராந்தி பரிஷத் என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. திருமணமாகாத ஐம்பது ஆண்கள் ஐம்பது குதிரைகளில் சோலாப்பூர் வீதிகளில் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலம் முடிவுற்றது. ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அவர்கள் அளித்தனர்.
அதில், "மகாராஷ்டிர மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. இதனால், மணப்பெண் கிடைப்பது கடினமாக உள்ளது. இந்த பாலின ஏற்றத்தாழ்வுக்கு பொறுப்பேற்று அரசாங்கம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்குக் கடுமையான தண்டனை வேண்டும்," என்று அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். பெண் சிசு கொலையே பெண்களின் எண்ணிக்கை சரிவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

