இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து கொந்தளித்த மக்கள் ஒன்றுகூடிய போராட்டக்களம் கிறிஸ்துமஸ் அலங்காரம் பூண்டுள்ளது.
இலங்கை ராணுவம் அந்த இடத்தில் விழாக்கால கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
கடுமையான பொருளியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்றதாகக் கூறி நாட்டின் தலைவர்களுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்துக் கிளம்பிய இலங்கை மக்கள் கொழும்பு நகரின் கடல்முகப்புப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டம் நடத்தினர்.
அப்போது அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்சேவும் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கூடாரத்தைச் சுற்றி திரண்டிருந்து முழக்கம் எழுப்பினர்.
போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து இவ்விருவரும் பதவி விலகினர். நாட்டைவிட்டே ஓடும் நிலை கோத்தபாய ராஜபக்சேவுக்கு ஏற்பட்டது.
அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ள அந்த போராட்டக்களம் தற்போது புதுக்கோலம் பூண்டுள்ளது.
மக்கள் திரண்டு வந்து கொண்டாட்டங்களில் ஈடுபடும் வகையில் அந்த இடத்தின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது இலங்கை ராணுவம். பெரிய பெரிய கிறிஸ்துமஸ் மரங்களை பல வண்ணங்களில் அவர்கள் நட்டு வைத்து உள்ளனர். அலங்கார பேருந்து ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாய்கள் பங்கேற்கும் கேளிக்கை நிகழ்ச்சியும் அங்கு நடத்தப்படுகிறது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பலத்தைக் காட்ட போராட்டக்களத்தை கொண்டாட்டத்தலமாக மாற்றியிருக்கிறார்கள் என்று கொழும்பில் இயங்கும் 'பாலிசி ஆல்டர்நேட்டிவிஸ்' என்னும் சிந்தனை மன்றத்தின் நிர்வாக இயக்குநரான பாக்கியஜோதி சரவணமுத்து தெரிவித்து உள்ளார்.
போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதி முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதை நிரூபிக்கவும் அவர்கள் அந்த இடத்தை விளக்கொளியில் மின்னச் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

