சிங்கப்பூரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்த கிறிஸ்துமஸ் காலகட்டத்தின்போது தங்கள் பண்டிகைகாலச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
யூகவ் இணையம் வழியாக நடத்திய ஆய்வில் அது தெரிய வந்தது.
18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள 1,027 சிங்கப்பூர் பெரியவர்களிடம் டிசம்பர் 15 அன்று ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்களில் 20 விழுக்காட்டினர் தங்கள் கிறிஸ்துமஸ் செலவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறினர். 'ஸி' தலைமுறையினர் என்று அழைக்கப்படும் 1997க்கும் 2012க்கும் இடையே பிறந்தவர்களில் கால்வாசியினர், செலவுகள் மாறாது என்றனர்.
ஆய்வில் கலந்துகொண்ட பத்து பேரில் ஒருவர் வழக்கத்தைவிட அதிகம் செலவு செய்யப்போவதாகக் கூறினர்.
மற்றவர்கள் தெரியவில்லை என்றோ தாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவில்லை என்றனர்.
கிறிஸ்துமஸ் நேரத்தில் மற்றவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியும் ஒன்றுகூடல்களுக்குச் சென்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.
இவ்வாண்டு மூன்றில் ஒரு பங்கினர் 101 வெள்ளிக்கும் 500க்கும் இடைப்பட்ட தொகையைச் செலவு செய்யப்போவதாகக் கூறினர்.
ஆய்வில் கலந்துகொண்ட பாதி பேர் 100 வெள்ளிக்கும் குறைவாகச் செலவு செய்யப்போவதாகக் குறிப்பிட்டனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஆகிய பண்டிகைகளின் வரிசையில் ஜனவரி 22ஆம் தேதி சீனப் புத்தாண்டும் விரைவில் வரவிருப்பதாலும் விலைகள் அதிகரித்திருப்பதாலும் பலருக்குச் செலவுகள் கையைக் கடிப்பதாக சிஐஎம்பி வங்கியில் பணியாற்றும் பொருளியல் நிபுணர் சொங் செங் வுன் கூறினார்.

