நாளும் 500,000 பேர் பாதிப்பு

நாளும் 500,000 பேர் பாதிப்பு

2 mins read
fe3dc5fb-eaeb-4647-b25e-715fb95eca21
-

சீனாவில் தலைவிரித்தாடும் கொவிட்-19; அதிகாரபூர்வ தரவிற்கு முரணான சிங்டாவ் நிலவரம்

சீனா­வின் சிங்டாவ் நக­ரில் மட்டும் நாளொன்­றுக்­குக் கிட்­டத்­தட்ட அரை மில்­லி­யன் பேர் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­வதாக அந்­ந­க­ரின் சுகா­தா­ரத் துறைத் தலை­வர் தெரி­வித்­து இருக்கிறார்.

சீனா­வில் கொவிட்-19 தொற்று வேக­மா­கப் பரவி வரு­வ­தா­கக் கூறப்பட்டாலும் அதி­கா­ர­பூர்­வப் புள்­ளி­வி­வ­ரங்­கள் அதன் உண்­மை­நி­லையை எடுத்­துக்­காட்­டு­வதாக இல்லை என்­ப­தைக் குறிப்­பி­டு­வ­தாக அவ­ரது இந்த ஒப்­பு­தல் அமைந்­துள்­ளது.

ஆங்­காங்கே மக்­கள் போராட்­டத்­தில் இறங்­கி­யதை அடுத்­தும் கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்­கும் நிலைப்­பாட்­டைச் சீனா அண்­மை­யில் மாற்­றிக்­கொண்­டது. திடீர் திடீ­ரென முடக்­க­நி­லையை அறி­வித்­தல், நீண்­ட­கா­லத் தனி­மைப்­ப­டுத்­தல், போக்­கு­வ­ரத்­துத் தடை­கள் போன்ற முக்­கி­யக் கட்­டுப்­பா­டு­கள் அகற்­றப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து, அந்­நாட்­டின் பல நக­ரங்­க­ளி­லும் கொரோனா தொற்று வேக­மா­கப் பரவி வரு­கிறது. இதன் கார­ண­மாக அங்கு மக்­கள் சளி, காய்ச்­சல், இரு­மல் மருந்­து­களை வாங்­கிக் குவிப்­ப­தால் மருந்­த­கங்­களில் அடுக்­கு­கள் காலி­யாக உள்­ளன. மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழி­வ­தா­க­வும் தக­னச்­சாலை­க­ளி­லும் இறு­திச்­ச­டங்கு இல்­லங்­க­ளி­லும் மக்கள் காத்­தி­ருக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

கட்­டா­யப் பரி­சோ­தனை முடி­விற்கு வந்­ததால் உண்­மை­யான பாதிப்பு நில­வ­ரத்­தைக் கணக்­கிடு­வ­தில் சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், கொவிட்-19 மர­ணத்­திற்­கான வரை­ய­றை­யை­யும் திருத்­தி­யுள்­ள­தால், அத­னால் இறப்­போ­ரின் எண்­ணிக்கை குறைத்­துக் காட்­டப்­ப­ட­லாம் என்­பது சுகா­தார வல்­லு­நர்­க­ளின் கருத்து.

இந்­நி­லை­யில், சீனா­வின் கிழக்­குக் கட­லோ­ரப் பகு­தி­யில் அமைந்­துள்ள சிங்டாவ் நக­ரில் நாள்­தோறும் 490,000 முதல் 530,000 பேர்­வரை கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­கின்­ற­னர் என்று அந்­ந­க­ரின் சுகா­தா­ரத் துறைத் தலை­வர் டாக்டர் போ தாவ் தெரி­வித்­த­தாக அங்­குள்ள ஓர் ஊட­கம் நேற்று முன்­தி­னம் செய்தி வெளி­யிட்டு இருந்­தது.

அந்­ந­க­ரில் இந்த வார இறு­திக்­குள் பாதிப்பு விகி­தம் மேலும் 10% உய­ரக்­கூ­டும் என்­றும் டாக்டர் போ குறிப்­பிட்டிருந்­தார்.

அச்­செய்­தி­யைப் பல்­வேறு ஊட­கங்­களும் பகிர்ந்­தி­ருந்த நிலை­யில், பாதிப்பு எண்­ணிக்கை நேற்று அகற்­றப்­பட்­டு­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

நாடு முழு­வ­தும் நேற்று முன்­தி­னம் புதி­தாக 4,103 பேரை கொரோனா தொற்­றி­யி­ருக்­கிறது என்­றும் அந்­நோ­யால் மேலும் ஒரு­வர்­கூட இறக்­க­வில்லை என்­றும் சீனா­வின் தேசிய சுகா­தார ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

ஆனால், குவாங்டோங் மாநிலம், டோங்குவான் நகரில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 250,000 - 300,000 என்ற அளவில் இருப்பதாக அந்நகரின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ரத்தத்திற்குக் கடும் தட்டுப்பாடு

இதற்­கி­டையே, சீனா­வில் பல்­வேறு நக­ரங்­க­ளி­லும் உள்ள மருத்­து­வ­மனை­களில் ரத்­தத்­திற்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

அண்­மைய நாள்­க­ளாக இரண்டு வகை ரத்­தம் போதிய அளவு கையி­ருப்பு இல்லை என்று ஷாண்­டோங் மாநில ரத்த நிலை­யம் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. மூன்று நாள்­க­ளுக்­குப் போது­மான அளவு மட்­டுமே ரத்தம் கையி­ருப்­பில் உள்­ளதை இந்தச் சிவப்பு எச்­ச­ரிக்கை குறிப்­பி­டு­கிறது.