கொவிட்-19 தொற்றுப் பரவல் திடீரென உயரும் பட்சத்தில், அவசரகால அளவில் அதனை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்காக நாளை மறுநாள் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாழு முழுதும் கொவிட்-19 மேலாண்மை ஆயத்தநிலை ஒத்திகை இடம்பெறவுள்ளது.
இந்த ஒத்திகையில் நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் பங்குகொள்ளும்.
நாட்டில் கொவிட்-19 தொற்று பாதிப்பு, உள்கட்டமைப்பு தயார்நிலை, தடுப்பூசி நடவடிக்கை முதலியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 22ஆம் தேதி உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, உயிர்வாயுக் கலன்கள், உயிர்வாயு உற்பத்தி ஆலைகள், செயற்கை சுவாசக் கருவிகள், மனிதவளம் உள்ளிட்டவை போதிய அளவில் இருந்து, மருத்துவமனைகள் தயார்நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, நாடு தழுவிய ஒத்திகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்நடவடிக்கைக்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தன.
இந்த ஒத்திகையின்போது, புறநோயாளிப் பிரிவுகளில் பணியில் இருக்கும் மருத்துவர்களும் தாதியரும் தனிநபர் பாதுகாப்பு அங்கி அணிந்தபடி நோயாளிகளுக்கு மூச்சுப் பிரச்சினைகள் உள்ளனவா எனப் பரிசோதிப்பர். அவசர சிகிச்சைப் பிரிவுகளும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் முழு எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் இயங்கும்.
"தனிநபர் பாதுகாப்பு அங்கி, உயிர்வாயு விநியோகம் மற்றும் கண்காணிப்பு, செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றின் தயார்நிலை மதிப்பிடப்படும். ஏதேனும் குறைபாடு அல்லது பற்றாக்குறை இருப்பின், அவை சரிசெய்யப்படும். அதன்மூலம் நெருக்கடிநிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்," என்று அதிகாரிகள் கூறினர்.
இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆயினும், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதார உள்கட்டமைப்பின் ஆயத்தநிலை மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டாய 'பிசிஆர்' பரிசோதனை
இதற்கிடையே, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாய 'ஆர்டி-பிசிஆர்' பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அமைச்சர் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். தொற்று அறிகுறியுள்ளோர் தனிமைப்படுத்தப்படுவர்.
அத்துடன், இந்த ஐந்து நாடுகளில் இருந்து வருவோர் தங்களின் உடல்நிலை குறித்த தகவல்களைக் குறிப்பிடும் வகையில் 'ஏர் சுவிதா' படிவத்தையும் நிரப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

