அமெரிக்காவை உலுக்கிவரும் பனிப்புயல், குறைந்தது 38 பேரின் உயிரைப் பறித்துவிட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருந்த அமெரிக்கர்களைத் தற்போது கடுங்குளிர், பலத்த காற்று ஆகியவை அச்சத்தில் உறைய வைத்துள்ளன.
மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இயல்புநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
"சாலைகள் போர்க்களத்தைப் போல காட்சி அளிக்கின்றன. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது," என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார்.
அவரது சொந்த ஊரான பஃபல்லோவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து, 2.4 மீட்டர் உயரமுள்ள பனிக்குவியலால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, பல பகுதிகளில் மின்
சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தாங்க முடியாத குளிரால் நடுங்கும் மக்களின் நிலை மோசமடைந்துள்ளது. மின்சாரம் இல்லாத காரணத்தால் சூடேற்றும் கருவியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக திருமதி ஹோச்சுல் கவலை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் அனைவரும் தங்கள் வீடு
களிலேயே இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
நியூயார்க்கின் மேற்குப் பகுதி யில் உள்ள பஃபல்லோ நகரைப் பனிப்புயல் புரட்டிப் போட்டதை அடுத்து, அங்கு நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை அவசரகாலச் சேவை அதிகாரி
களால் சென்றடைய முடியவில்லை.
பொதுவாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையின்போது அமெரிக்கர்கள் பலர் வெளிநாடுகளுக்கு அல்லது உள்ளூரிலேயே பயணம் மேற்கொள்வர். ஆனால் இம்முறை பனிப்புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டோர் தங்கள் பயணத் திட்டங்
களைக் கைவிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல சாலைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
கடந்த ஐந்து நாள்களாக இடைவிடாது தாண்டவம் ஆடும் பனிப்புயலின் சீற்றம் குறைவதாகத் தெரியவில்லை. கடந்த வார
இறுதியில் அமெரிக்காவின் 48 மாநிலங்களில் வெப்பநிலை நினைத்துப் பார்க்காத அளவுக்குக் குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பஃபல்லோ நகரில் மீட்புப் பணிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளன. இருப்பினும், மீட்புப் பணியாளர்களுக்கே உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனிப்புயல் காரணமாக மீட்புப் பணியாளர்களால் அவர்களது வாகனங்களிலிருந்து இறங்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உதவி தேவைப்பட்டு அவசரச் சேவைப் பிரிவை அழைத்த பலருக்கு உதவி
சென்றடையவில்லை. இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு, ஆடவர் ஒருவர் தமது நான்கு சிறு பிள்ளைகளுடன் காரில் சிக்கிக்கொண்டார்.
காவல்துறையினரையும் மீட்புப் படையினரையும் அவர் மாறிமாறி பலமுறை அழைத்தும் பலனில்லாமல் போனது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாளன்று கிட்டத்தட்ட 11 மணி நேரத்துக்கு திரு ஸிலா சான்டியாகோவும் அவரது பிள்ளைகளும் காருக்குள், இருளில் முடங்கிக் கிடந்தனர்.
பனிப்புயல் வீசும் நேரத்தில் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டும் வேறு வழியின்று வாகனம் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த ஆடவர் தெரிவித்தார்.
குழந்தை பராமரிப்பாளரிடம் தமது பிள்ளைகளை விட்டுச் செல்ல தமக்குப் போதுமான பணம் இல்லாததால் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவ்வாறு செய்ததாக அவர் அதிகாரிகளிடம் கூறினார். இதற்கு முன்பு பல புயல்களைப் பார்த்திருப்பதாகக் கூறிய திரு சான்டியாகோ, இதுபோன்ற மிக மோசமான பனிப்புயலைத் தமது வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்க நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் திரு சான்டியாகோவும் அவரது பிள்ளைகளும்
மீட்கப்பட்டனர்.

