சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதையடுத்து, இந்தியாவிலும் அதுபோன்றதொரு நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் நேற்று அங்கு நாடு முழுவதும் பொது, தனியார் மருத்துவமனைகளில் ஒத்திகை இடம்பெற்றது.
அதன்படி, மருத்துவமனைகளில் படுக்கை வசதி, உயிர்வாயு விநியோகம், மருந்து மாத்திரை இருப்பு, மனிதவளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் போதிய அளவில் உள்ளனவா என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு இடம்பெற்ற கொவிட்-19 ஆயத்தநிலை ஒத்திகையைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கவனமாகச் செயல்பட்டு நாட்டில் கொவிட்-19 தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை மீண்டும் கொரோனா பரவத் தொடங்கினால் அதனை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த நாட்டிலுள்ள கொவிட்-19 சிகிச்சை மையங்களில் இன்றைய ஒத்திகை இடம்பெறுகிறது," என்றார்.
மாநிலங்களில் இடம்பெற்ற ஒத்திகையில் அந்தந்த மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அவ்வகையில், தமிழக மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒத்திகையைத் தொடங்கிவைத்தார்.
அனைத்து மருத்துவக் கட்டமைப்பு வசதிகளையும் தயார்நிலையில் வைத்திருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். அத்துடன், முன்களப் பணியாளர்கள், மருத்துவ வசதிகள் போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை அனைத்து மருத்துவமனைகளும் 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.
இதனிடையே, நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 157 பேரை கொவிட்-19 தொற்றிவிட்டதாக இந்திய சுகாதார அமைச்சு நேற்றுக் காலை வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவித்தது.

