கடுமையான மூடுபனி காரணமாக சீனாவின் ஹினான் மாநிலம், ஸெங்ஸோ நகரில் பாலம் ஒன்றில் நேற்று காலை ஏற்பட்ட பெரிய விபத்தில் பலநூறு வாகனங்கள் சிக்கிக்கொண்டன.
சம்பவ இடத்தில் இருந்த மீட்புப் பணியாளர்களின் முன்னோட்ட கணிப்பின்படி, 200க்கும் அதிகமான வாகனங்கள் விபத்தில் சிக்கின.
ஸெங்ஸின் ஹுவாங்ஹெ பாலத்தில் ஏற்பட்ட அந்த விபத்தில் பல கார்களும் டிரக் வாகனங்களும் ஒன்றின்மேல் ஒன்றாக ஏறி நின்றன.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம் தெரியவில்லை. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் பலர் தங்களது வாகனங்களில் சிக்கிக்கொண்டனர்.
தீயணைப்புத் துறையினர் பாலத்தில் அவர்களை மீட்க உதவியதை அரசாங்க ஊடகமான சிசிடிவியின் காணொளி காட்டியது.
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு 11 தீயணைப்பு வாகனங்களும் 66 தீயணைப்பு, மீட்புப் பணியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூடுபனி காரணமாக மேம்பாலத்தைக் கடக்க அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக உள்ளூர் போக்கு வரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸெங்ஸோவின் பல இடங்களில் 500 மீட்டர் தொலைவுக்கு மேல் எதையும் பார்க்க முடியவில்லை என்றும் சில நேரங்களில் 200 மீட்டர் தூரத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் தெரியவில்லை என்றும் அந்த நகரத்தின் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்த பகுதியைப் படம் எடுத்த ஓட்டுநர் ஒருவர், "இது மிகவும் பயங்கரமாக உள்ளது. இங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பாலத்திலிருந்து நாங்கள் வெளியேற முடியும் என்று எனக்கு தோன்றவில்லை," என்றார்.
ஸெங்ஸின் ஹுவாங்ஹெ பாலம், மஞ்சள் ஆற்றைக் கடப்பதற்கான அப்பகுதி யின் முக்கிய பாலம் ஆகும்.

