சீனா அதன் எல்லைகளை வரும் ஜனவரி 8ஆம் தேதி திறக்கவுள்ள வேளையில் சிங்கப்பூர் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தற்போதைய விதிமுறைகளில் மாற்றமில்லை என்று சிங்கப்பூர் கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் தங்கள் பயணத்துக்கு முன்னர் கிருமிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
அது குறித்த ஊடகங்கள் விடுத்த கேள்விகளுக்கு சுகாதார அமைச்சு நேற்று பதில் அளித்தது.
குறுகிய காலத்துக்கு இங்கு வருவோர், கொவிட்-19 மருத்துவச் செலவுகளை ஈடுகட்டும் காப்புறுதியை வாங்க வேண்டும்.
இந்தக் கட்டத்தில் சீனாவிலிருந்து வரும் பயணிகள், வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியர்கள் ஆகியோருக்கான தற்போதைய எல்லை தொடர்பான நடவடிக்கைகளிலும் தடுப்பூசி விதிமுறைகளிலும் மாற்றமில்லை என்று அமைச்சு கூறியது.
அனைத்துலக கொவிட்-19 நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தேவைப்பட்டால் எல்லை தொடர்பான சுகாதார நடவடிக்கைகளைத் தகுந்தவாறு தான் மாற்றப்போவதாகவும் அமைச்சு சொன்னது.
சீனா நேற்று முன்தினம் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை அகற்றியதை அடுத்து, சிங்கப்பூர் வருவதற்கான பயண முன்பதிவு பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களில் பலர் சிங்கப்பூர் வர முன்பதிவு செய்திருப்பதாக ட்ரிப்.காம் இணையத்தளம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறின.
தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் பயண முன்பதிவு கூடியுள்ளது.
மற்ற நாடுகளில் கட்டுப்பாடுகள்
சீனாவிலிருந்து வரும் பயணி களின் எண்ணிக்கை அடுத்தாண்டு மிகவும் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு நாடுகள், சீனப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன அல்லது அது குறித்து பரிசீலித்து வருகின்றன.
சீனாவில் கொவிட்-19 கிருமித்தொற்று மிகவும் கூடியுள்ளதால் நோயாளிகளைச் சமாளிக்க அங்குள்ள மருத்துவமனைகள் சிரமப்பட்டு வருகின்றன.
ஆனால் தொற்று நிலவரம் பற்றிய மாறுபட்டத் தகவல்கள் பிற நாடுகளில் கவலையை ஏற் படுத்தியுள்ளன.
இந்நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சீனப் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
ஜப்பானுக்குச் செல்லும் அனைத்துச் சீனப் பயணிகளுக்கும் வந்திறங்கியதும் அவர்களுக்கு கொவிட்-19 கிருமிப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் தொற்றுள்ளவர்கள் ஏழு நாள் களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் கூறியது. இந்தியா, அனைத்துலகப் பயணிகளில் இரண்டு விழுக்காட்டினரிடம் கிருமிப் பரிசோதனைகளைச் சென்ற வாரம் தொடங்கியது.
இந்நிலையில் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, சீனச் சுற்றுப்பயணிகளால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பைப் பற்றி பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். தாய்லாந்து, சீன நாட்டவரை ஈர்க்கும் நோக்கில் சுற்றுப்பயணத் திட்டங்களைத் திருத்தி வருவதாகக் கூறியுள்ளது.
இந்தியா செல்லும் சிங்கப்பூர் பயணிகளுக்கு கட்டாயக் கிருமிப் பரிசோதனை இல்லை
- செய்தி பக்கம் 2ல்

